திடீரென வெடித்த மதக்கலவரம், 7 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு - 5 பேர் உயிரிழப்பு!
ஹரியானாவில் திடீரென வெடித்த கலவரத்தால் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கலவரம்
ஹரியானா மாநிலத்தில், நுஹ் என்ற இடத்தில் விஷ்வ இந்து பரிஷத் சார்பாகப் பேரணி நடத்தப்பட்டது. இது முஸ்லிம்கள் அதிகம் வசித்த பகுதி அருகே தடுத்து நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் இரு தரப்பினருக்கிடையே மோதல் வெடித்து, தாக்குதல் நடந்திருக்கிறது.
மேலும், ஏராளமான வாகனங்களுக்கும் தீவைக்கப்பட்டிருக்கிறது. இந்த திடீர் வன்முறையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், அதனை தடுக்க முயன்ற காவலர்களில் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் நுஹ் நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
ஊரடங்கு உத்தரவு
இந்நிலையில், நள்ளிரவில் அப்பகுதிக்கு அருகே மர்மக் கும்பல் ஒன்று, குருகிராமில் செக்டர் 24-லிருக்கும் அஞ்சுமான் ஜமா மஸ்ஜித்துக்குத் தீவைத்தது. அதோடு அங்கிருந்த மத குரு ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.
இதனால் இந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள 7 மாவட்டங்களில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை வரை இந்த மாவட்டங்களில் இணைய சேவையும் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.