அரசு வேலைக்காக.. கிறிஸ்தவ மதத்தில் உள்ளவர்கள் இந்து எஸ்சி சான்றிதழ் பெறலாமா? உச்ச நீதிமன்றம் காட்டம்!
கிறிஸ்தவ மதத்தை கடைபிடிப்பவர் அரசு வேலைக்காக இந்து பட்டியலினத்தவராக அடையாளப்படுத்த முடியாது.
சாதிச் சான்றிதழ்
புதுச்சேரியைச் சேர்ந்தவர் சி.செல்வராணி. இவரது தந்தை இந்து ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர். தாயார் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். செல்வராணி தேவாலயத்தில் ஞானஸ்தானம் பெற்றவர்.
ஆனால், மாநில அரசின் கிளார்க் பணியிடத்துக்காக பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் எனக்கூறி விண்ணப்பித்து தேர்ச்சி பெற்றுள்ளார். பின் சாதிச் சான்றிதழ் சரிபார்ப்பின்போது அவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
தொடர்ந்து, தனது தந்தையின் இந்து மதத்தின் அடிப்படையில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என சாதி சான்றிதழ் வழங்கும்படி கோரியுள்ளார். இதனை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். இதனை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு
அதில், இடஒதுக்கீட்டு சலுகைகளைப் பெறுவதற்காக மதம் மாறுபவர்களுக்கு இதுபோல சாதிச் சான்றிதழ் வழங்க முடியாது எனக்கூறி வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பங்கஜ் மித்தல், ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு,
மனுதாரர் கிறிஸ்துவ மதத்தை தீவிரமாக கடைபிடிக்கும்போது, அரசு வேலைவாய்ப்புக்காக இந்துவாக தன்னை அடையாளப்படுத்த முற்படுவதை ஏற்க முடியாது. மேலும் அது அரசியலமைப்பு சட்டத்தையே மோசடி செய்வதற்கு சமம் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.