ரேஷன் கடைகளுக்கு அதிரடி உத்தரவிட்ட அரசு - நிம்மதியடைந்த பொதுமக்கள்
ரேஷன் கடைகளில் மளிகை பொருட்களை கட்டாயபடுத்தி விற்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
ரேஷன் கடை
ரேஷன் கடைகளில், பொதுமக்களுக்கு நியாய விலையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகையின் போது கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் வேஷ்டி, சேலையும் வழங்கப்படுகிறது.
அத்தியாவசிய பொருட்களுடன், மானிய விலையில் உப்பு, டீ துாள், சாம்பார் பொடி, சோப்பு வகைகள், மசாலா பொடிகள், பெருங்காயம், என 30க்கும் மேற்பட்ட மளிகை பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது.
மளிகை பொருட்கள்
பல ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் மக்களிடம் மளிகை பொருட்களை கட்டாயப்படுத்தி விற்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு தீபாவளி மளிகை தொகுப்பானது விநியோகம் செய்ய அனுப்பப்பட்டது. இதில் விற்பனை போக கையிருப்பில் உள்ள பொருட்களை மக்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வதாக புகார் எழுந்தது.
நடவடிக்கை
இந்நிலையில், ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்களிடம் கட்டாயப்படுத்தி எந்த பொருளையும் விற்க கூடாது என்றும் அவ்வாறு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இது தொடர்பான நோட்டீஸை ரேஷன் கடைகளில் ஒட்டும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தீபாவளி மளிகை தொகுப்பில் விற்பனை ஆகாமல் கையிருப்பில் உள்ள பொருட்களை திருப்பி அனுப்ப கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.