நியூசிலாந்தின் மாவோரி பழங்குடி மக்கள் - தமிழர்களுடன் இப்படி ஒரு தொடர்பா..?
நியூசிலாந்தில் வாழ்ந்து வரும் மாவோரி பழங்குடியின மக்களை பற்றிய தகவல்.
மாவோரி மக்கள்
நியூசிலாந்தில் மாவோரி என்ற பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கென தனியாக மொழி, கலாச்சாரம், மரபுகள், பழக்க வழக்கங்கள் உள்ளன. மாவோரி மக்களின் முக்கிய வேலைகளாக நெசவு மற்றும் பச்சை குத்துதல் ஆகியவை உள்ளது.
இவர்களின் 'ஹக்கா' என்ற பாரம்பரிய நடனம் மிகவும் உற்சாகமாக இருக்கும். துடிப்பான அசைவுகள், தாளங்கள் பார்ப்பவர்களை ஆட வைத்துவிடும். மாவோரி பழங்குடியின மக்களின் சுமார் 13-ம் நூற்றாண்டில், கிழக்கு பாலினேசியாவிலிருந்து படகுகள் மூலம் நியூசிலாந்திற்கு வந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சமீபத்தில் 'மைபி கிளார்க்' என்ற 21 வயது மாவோரி பழங்குடியின பெண் நியூசிலாந்து நாடாளுமன்றத்திற்கு முதல்முறையாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அப்போது அந்த பெண் எம்.பி. தங்களது பாரம்பரிய 'ஹக்கா' நடனத்தை நாடாளுமன்றத்தில் நிகழ்த்தியிருந்தார். இந்த வீடியோ அப்போது சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில் தமிழர்களுக்கும் மாவோரிகளுக்கும் என்ன தொடர்பு என்பதை பார்ப்போம். தமிழ் மொழியை போலவே மாவோரி மொழியும் மிகவும் பழமையானதாம். தமிழுக்கும் மாவோரிகள் பேசும் மொழிக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
வெண்கல மணி
மாவோரி மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள ஒரு ஒற்றுமைக்கு ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வெண்கல மணி ஒன்று நியூசிலாந்தின் கரியோரா என்ற இடத்தில் கிடைத்துள்ளது.
மாவோரிகள் கடல் கடந்து பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அப்படி ஏற்பட்ட தொடர்புதான் இதுவோ என்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். மேலும், கடந்த 2022-ம் ஆண்டு நியூசிலாந்து முழுவதும் மாவோரிகளின் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
அப்போது, தங்களது முன்னோர்கள் என தமிழர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதேபோல், இரு மொழிகளுக்குமான கற்பித்தல் மற்றும் வேறுபாடு குறித்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
இதன் மூலம் அப்போதே தமிழர்கள் கடல் கடந்து சென்று தங்களது கலாச்சாரம், மொழி, பெருமை ஆகியவற்றை வித்திட்டு மரமாக முளைக்கச் செய்துள்ளனர் என்பது தெரியவருகிறது.