டெல்லியின் புதிய முதல்வர் இவர்தான் - யார் இந்த ரேகா குப்தா?
டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி பாஜக ஆட்சி
நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள 70 இடங்களில் 48 இடங்களை வென்று 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக டெல்லியில் ஆட்சியமைத்தது.
யார் டெல்லியின் புதிய முதல்வர் என பலரின் பெயர் அடிப்பட்ட நிலையில், இன்று(19.02.2025) டெல்லியில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், ரேகா குப்தா டெல்லியின் 9வது முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரேகா குப்தா
தற்போது பாஜக ஆளும் மாநிலங்களில் பெண் முதல்வர் யாரும் இல்லாத நிலையில் ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக பாஜக சார்பில் சுஷ்மா சிவராஜ், ஆம் ஆத்மி சார்பில் அதிஷி ஆகியோர் டெல்லியில் பெண் முதல்வர்களாக இருந்துள்ளார்கள். இந்தியாவில் தற்போது ரேகா குப்தாவும் மம்தா பானர்ஜியும் பெண் முதல்வர்களாக உள்ளனர்.
41 வயதான ரேகா குப்தா, இள வயதில் ABVP மூலம் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய இவர், டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராகவும், 3 முறை கவுன்சிலராகவும், தெற்கு டெல்லி நகராட்சியின் மேயராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது பாஜக மகளிர் அணியின் துணைத்தலைவராக உள்ள இவர், முன்னதாக டெல்லி மாநில பாஜக பொதுச்செயலாளராக பதவி வகித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஷாலிமார் பாக் தொகுதியில் போட்டியிட்டு 29,595 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறை எம்.எல்.ஏ ஆனவர், முதலமைச்சராகவும் ஆகியுள்ளார்.
நாளை(20.02.2025) மதியம் 12.35 மணியளவில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள், பிற மாநில பாஜக தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.