டெல்லியின் புதிய முதல்வரான அதிஷி மர்லினா - யார் இவர்?
டெல்லியின் புதிய முதல்வரான அதிஷி மர்லினா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால்
மதுபான கொள்கை வழக்கில் கடந்த மார்ச் 21 ஆம் தேதி கைதான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 13-ம் தேதி ஜாமீனில் விடுதலையானார்.
முதல்வர் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது. ஆளுநரின் ஒப்புதல் இன்றி கோப்புகளில் கையெழுத்திடக்கூடாது என உச்ச நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தது.
ராஜினாமா
இதனையடுத்து முதல்வர் பதவியை இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்ய விரும்புகிறேன். நான் நேர்மையானவன் என்று மக்கள் தீர்ப்பளிக்கும் வரை முதல்-மந்திரி நாற்காலியில் அமரமாட்டேன். நான் நேர்மையானவன் என்று மக்கள் நினைத்தால் மீண்டும் எனக்கு வாக்களிக்கட்டும் என பேசினார்.
இன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ள நிலையில், அடுத்த முதல்வர் யார் என்பதற்கான ஆலோசனை கூட்டம் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் இன்று காலை ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் மூத்த அமைச்சர் அதிஷி மர்லினாவை(Atishi Marlena) முதல்வர் பதவிக்கு கெஜ்ரிவால் முன்மொழிந்தார். இதனையடுத்து அதிஷி மர்லினா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதிஷி மர்லினா
கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சி ஆரம்பித்த சமயத்தில் கட்சியில் இணைந்த இவர், 2013-ம் ஆண்டு நடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான கட்சியின் அறிக்கை வரைவுக் குழுவின் முக்கிய உறுப்பினராகச் செயல்பட் ஆம் ஆத்மி கட்சியின் ஆரம்பக் காலங்களில் கட்சியின் கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றி வந்தார். இதனால், கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் பதவி உயர்வு பெற்றார்.
டெல்லியின் கல்வி அமைச்சரான மணீஷ் சிசோடியாவின் ஆலோசகராகப் பணியாற்றி வந்த அதிஷி டெல்லி யில் உள்ள அரசு பள்ளிகளில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தார். 2022 ஆம் ஆண்டு டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்குள்ள பள்ளிகளை பார்வையிட்ட பின், "டெல்லி மாடல் அரசுப் பள்ளிகள் போல தமிழகத்திலும் அமைக்கப்படும்" என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அமைச்சர் பதவி
அரசின் ஆலோசகராக அதிஷி தனது பணியைத் தொடர்ந்து வந்த நிலையில், யூனியன் பிரதேசமான டெல்லியில், ஆலோசகர் என்ற பதவி சட்ட விதிகளில் இல்லாததைக் காரணம் காட்டி மத்திய உள்துறை அமைச்சகத்தால் 2017 ஏப்ரல் மாதம் அதிரடியாகப் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன் பிறகு, 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டப் பேரவைக்கான தேர்தலில் வெற்றி பெற்று, தெற்கு டெல்லியின் கல்காஜி தொகுதியில் எம்.எல்.ஏ-வாகப் பணியைத் தொடர்ந்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழு உறுப்பினர், தேசிய செயற்குழு ஆலோசகர் ஆகிய பதவிகளை வகித்து வந்த அதிஷி கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியா பதவி இழந்த போது அமைச்சராகி கல்வி, பொதுப்பணித்துறை, சுற்றுலா ஆகிய முக்கிய துறைகளை கவனித்து வந்தார்.
மெலனியா ட்ரம்ப் பாராட்டு
அதிஷி நீர்வளத்துறை அமைச்சராக பணியாற்றிய போது, ஹரியானா மாநில அரசு டெல்லிக்கு தர வேண்டிய தண்ணீரை குறைத்து வழங்குவதாக கூறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். 4 நாள் உண்ணாவிரதம் இருந்த நிலையில் அவரது உடல்நிலை கடுமையாக பாதிப்படைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் மகள் மெலனியா ட்ரம்ப்(melania trump), தனது முதல் இந்திய சுற்றுப் பயணத்தின்போது டெல்லியில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியைப் பார்வையிட்டு அரசின் இந்த முயற்சியைப் பாராட்டியதோடு, அமெரிக்காவில் இந்த முயற்சியை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.