எப்போதும் வெள்ளை டீ-சர்ட் தான்.. ஏன் தெரியுமா..? ராகுல் காந்தி விளக்கம்!
வெள்ளை நிற டி-சர்ட்டை தொடர்ந்து பயன்படுத்துவது ஏன்? என்பதற்கு ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.
ராகுல் காந்தி
அரசியல்வாதிகள் என்றாலே வெள்ளை நிறத்தில் வெட்டி, சட்டை, நீண்ட குர்தா, பைஜாமா என இருப்பர். குறிப்பாக பிரதமர் மோடி குர்தாவின் மேல் அணியும் அங்கி (ஜாக்கெட்) மிகவும் பிரபலம்.
அந்தவகையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடர்ந்து வெள்ளை நிற டீ-சர்ட்களை அணிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனது 54-வது பிறந்தநாளை கொண்டாடிய அவர், "ஏன் வெள்ளை நிற டி-சர்ட்டை தொடர்ந்து பயன்படுத்துகிறேன்? என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
என்ன காரணம்?
இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "ஏன் எப்போதும் ‘வெள்ளை டீ-சர்ட்டை’ அணிகிறேன் என்ற கேள்வி அடிக்கடி என்னிடம் கேட்கப்படுகிறது. இந்த வெள்ளை நிற டீ-சர்ட்டுகள் வெளிப்படை தன்மையை குறிக்கிறது.
எனக்கு திடத்தன்மை மற்றும் எளிமையை வழங்குகிறது. எங்கு மற்றும் எப்படி இந்த மதிப்புகள் உங்கள் வாழ்வில் பயனுள்ளதாக இருக்கும்? என்பதை #WhiteTshirtArmy என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி வீடியோவில் சொல்லுங்கள். நான் உங்களுக்கு ஒரு வெள்ளை டீ-சர்ட்டை பரிசாக தருகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.