தமிழகத்தில் தொடர்ந்து உயரும் அரிசி விலை - காரணம் என்ன?
தமிழகத்தில் அரிசி விலை தொடர்ச்சியாக உயர்வது நடுத்தர மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரிசி விலை உயர்வு
தமிழகத்தில் தொடர்ச்சியாக அரிசி விலை உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ புழுங்கல் அரிசி ரூ.50 முதல் ரூ.76 வரை விற்கப்படுகிறது. பச்சரிசி ஒரு கிலோ ரூ.70-க்கு விற்கிறது. அரிசியின் தரத்தையும், அதை உற்பத்தி செய்யும் நிறுவனத்தையும் பொருத்து விலை மாறுபடுகிறது.
சில குறிப்பிட்ட பிராண்ட்கள் விலை ரூ.70-க்கு மேல்தான் உள்ளது. இந்த விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அரிசி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மத்திய உணவுத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
மத்திய உணவுத்துறை அமைச்சர்
அந்த மனுவில், மாநிலத்துக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி தவிர்த்து மாதம் தோறும் 75 ஆயிரம் டன் கூடுதல் அரிசி, பொது விநியோகத்திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், மதிய உணவு மற்றும் காலை உணவுத் திட்டங்களுக்கு தேவைப்படுகிறது. கடந்த ஜூலை 9 ஆம் தேதியிட்ட மத்திய அரசின் கடிதத்தில் அந்த அரிசி கிலோ ரூ.28 க்கு இந்திய உணவுக்கழகம் மூலம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்த அரிசியை ஏற்கெனவே வழங்கப்பட்டது போல் கிலோ ரூ.20 க்கே வழங்க வேண்டும். மேலும் நெல் அரவை மானியம், சர்க்கரை மானியம் மற்றும் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய இதர மானிய நிலுவைத்தொகைகளை விடுவிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர். மனுவிலுள்ள கோரிக்கைகளை மத்திய அரசின் அதிகாரிகளிடம் ஆலோசித்த மத்திய அமைச்சா் விரைவில் நிலுவை தொகையை விடுவிப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விலை உயர்வு
அரிசி விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல் - அரிசி வணிகர்கள் சங்க சம்மேளன தலைவர் டி.துளசிங்கம், பொதுச் செயலாளர் டாக்டர் ஏ.சி.மோகன் ஆகியோர் கூறியதாவது, "தமிழகத்தில் உள்ள 7.50 கோடி மக்களுக்கு ஆண்டுக்கு 91 லட்சம் டன் அரிசி தேவை. ஆனால், தமிழகத்தில் 70 முதல் 72 லட்சம் டன் மட்டுமே உற்பத்தியாகிறது. கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து 25 முதல் 30 லட்சம் டன் நெல்லாகவும் அரிசியாகவும் வருகிறது.
அதனால், சந்தையில் எப்போதும் 5 லட்சம் டன் அரிசி உபரியாகவே உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக அரிசி தட்டுப்பாடு இல்லை. நெல் அறுவடை காலத்தில் விலை குறையும். அறுவடை இல்லாத காலங்களில் விலை உயரும். தவிர, அரிசி ஆலைகளில் வேலை செய்ய, வடமாநிலத்தில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வருவதால் உற்பத்தி செலவு அதிகமாகிறது.
மின் கட்டண உயர்வால் 1,800 அரிசி ஆலைகளின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. அதேநேரம், அரிசியின் மொத்த விலையில் பெரிய மாற்றம் இல்லை. டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்து செலவு அதிகரிப்பு, ஏற்று கூலி, இறக்கு கூலி போன்ற செலவினங்களால் அரிசியின் சில்லறை விலையில்தான் மாற்றம் வருகிறது" என தெரிவித்துள்ளனர்.