இனி ATM மூலம் ரேஷன் அரிசி பெறலாம் - எப்படி செயல்படும்?
நாட்டில் முதல் முறையாக ஏடிஎம் மூலம் ரேஷன் அரிசி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரேஷன் அரிசி ஏடிஎம்
நாட்டிலே முதல்முறையாக அரிசி வழங்கும் ஏடிஎம், ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் உள்ள மஞ்சேஷ்வரில் உள்ள ஒரு கிடங்கில் நிறுவப்பட்டு உள்ளது.இதை கடந்த வியாழக்கிழமை ஒடிசா உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் க்ருஷ்ண சந்திர பத்ரா தொடங்கி வைத்தார்.
இந்த இயந்திரம், பொது விநியோக முறை (பிடிஎஸ்) அரிசி விநியோகத்தை சீரமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கடைகளில் பயனாளிகள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதை தவிர்க்கவும், பயனாளிகள் சரியான எடையில் அரிசியைப் பெறுவதை உறுதி செய்யவும், கள்ள சந்தைகளில் விற்கப்படுவது ரேஷன் அரிசி திருட்டு போன்ற முறைகேடுகளை தடுக்கும் நோக்கிலும் அறிமுகப்படுத்தள்ளது.
பயோமெட்ரிக் சரிபார்ப்பு
இந்த அரிசி ஏடிஎம் ரேஷன் கார்டு தாரர்கள் தங்கள் ரேஷன் கார்டு எண்ணை தொடுதிரையில் உள்ளிட்ட பின்னர் கை ரேகை மூலம் பயோமெட்ரிக் சரிபார்ப்பு மேற்கொள்ள வேண்டும். அதன் பின் 25 கிலோ வரை அரிசியை வழங்க அனுமதிக்கிறது.
தற்போது ஒரு இடத்தில் மட்டும் உள்ள இந்த திட்டம் பயன்பாட்டை பொறுத்து 30 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் பல்வேறு மாநிலங்களும் தானியங்கி முறையில் ரேஷன் பொருட்கள் வழங்க முன் வரும் என அமைச்சர் ருஷ்ண சந்திர பத்ரா தெரிவித்தார்.