கவரைப்பேட்டை ரயில் விபத்து சதி திட்டமா? விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பான விசாரணையில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
பாக்மதி எக்ஸ்பிரஸ்
ரயில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல் கடந்த 11 ஆம் தேதி இரவு 07.44 மணியளவில் இந்த ரயில் புறப்பட்டது.
இரவு 8.15 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை கடந்து மெயின் லைனில் சென்ற இந்த ரெயில், கவரைப்பேட்டை ரெயில் நிலையத்தை நெருங்கியபோது, லூப் லைனுக்கு மாறியது.
கவரைப்பேட்டையில் விபத்து
சந்தேகம் அடைந்த லோகோ பைலட் ரெயிலின் வேகத்தை குறைத்தார். இரவு 8.26 மணியளவில் கவரைப்பேட்டை ரெயில் நிலையத்தில் லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 13 பெட்டிகள் தடம் புரண்டன.
தகவலறிந்த ரயில்வே அதிகாரிகள், திருவள்ளூர் மாவட்ட அரசு அதிகாரிகள், ரயில்வே போலீஸார், ஆர்.பி,எஃப். போலீஸார் அங்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 19 பேர் காயமடைந்தனர். காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.உயிரிழப்பு ஏதுமில்லை.
சதி வேலை
இந்த விபத்து தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள், மற்றும் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். லோகோ பைலட், ஸ்டேசன் மாஸ்டர், டெக்னிக்கல் டீம், சிக்னல் டீம் உள்ளிட்ட 15 ரயில்வே ஊழியர்களிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
விசாரணையில், கவரைப்பேட்டையில் 3 நட்டு போல்டுகள், பொன்னேரியில் 6 நட்டு, போல்டுகள் கழட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. எனவே திட்டமிட்ட சதி வேலையாக இருக்க வாய்ப்பு உள்ளது. விரைவில் விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிப்போம் என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.