மக்களவை தேர்தல்: மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்!
தென் சென்னைக்கு உட்பட்ட 13வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழிசை சவுந்தரராஜன்
மக்களவை தேர்தல் 2024 நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதியான நேற்று தொடங்கியது. இந்த தேர்தலானது வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிவடைந்தது.
இந்நிலையில் சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வுசெய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "சென்னை உள்ளிட்ட இடங்களில் வாக்கு சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது கவலை அளிக்கிறது.
மீண்டும் வாக்குப்பதிவு
சென்னையில் பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளது. பாஜகவுக்கு ஆதரவான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலில் குளறுபடி உள்ளது. பூத் ஏஜென்ட்டை வெளியே அனுப்பிவிட்டு கள்ள ஓட்டு போட்டுள்ளனர்.
தென் சென்னைக்கு உட்பட்ட 13வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும். பட்டியலில் வாக்காளர்களின் பெயர்கள் உள்ளதா என்பதை தேர்தல் ஆணையம் திரும்பத் திரும்ப சரிபார்க்க வேண்டும். வாக்காளர்களின் பெயர்கள் விடுபடாமல் இருக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.