இனி இவர்களுக்கெல்லாம் கடன் கொடுக்கக்கூடாது - செக் வைத்த ரிசர்வ் வங்கி!
ரிசர்வ் வங்கி கடன் வழங்குவதற்கு உச்சவரம்பை நிர்ணயித்துள்ளது.
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வங்கியின் இயக்குனர்கள், புரமோட்டர்கள், முக்கிய மேலாண்மை அதிகாரிகள் மற்றும் வங்கியில்
5 சதவீத பங்குகளை வைத்திருப்பவர்கள் ஆகியோர் தங்களின் உறவினர்கள் மற்றும் அவர்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு தங்கள் வங்கியில் கடன் வழங்கக்கூடாது.
அப்படியே கடன் வழங்கினாலும், சில நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும். அதன்படி அவர்களுக்கு கடன் வழங்குவதாக இருந்தால் அது தொடர்பான முடிவெடுக்கும் கூட்டத்தில் பங்கேற்கக்கூடாது. மேலும் ஜாமீன், கடன் தள்ளுபடி, மீட்பு, வாராக்கடன் தீர்வு போன்ற எந்தப் பணிகளிலும் பங்கேற்கக்கூடாது.
அவர்களுக்கு கடன் வழங்குவதற்கும் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி 10 லட்சம் கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள பெரிய வங்கிகள் அதிகபட்சமாக ரூ.50 கோடி வரை மட்டுமே கடன் தரலாம்.
வரைவு அறிக்கை
ஒன்று முதல் ரூ.10 லட்சம் கோடிக்கு கீழ் சொத்துள்ள நடுத்தர வங்கிகள் அதிகபட்சமாக ரூ.10 கோடியும். ரூ.1 லட்சம் கோடிக்கு கீழ் சொத்துள்ள சிறிய வங்கிகள் அதிகபட்சமாக ரூ.5 கோடியும். உள்ளூர் வங்கிகள் மற்றும் மத்திய-மாநில கூட்டுறவு வங்கிகள் ரூ.1 கோடியும்,
என்பிஎப்சிகள் ரூ.10 கோடி வரையும் மற்ற அனைத்து நிதி நிறுவனங்கள் ஆகியவை ரூ.50 கோடி வரையும் கடன் கொடுக்கலாம். இப்படி வழங்கப்படும் கடன்கள் குறித்து 6 மாதத்திற்கு ஒருமுறை ரிசர்வ் வங்கிக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
கூட்டுறவு வங்கிகள் நபார்டுக்கு கடன் விவரங்களை அறிக்கையாக அளிக்க வேண்டும். வங்கிகள் ஆண்டுதோறும் தங்களது நிதி அறிக்கைகளில் எவ்வளவு கடன் தொடர்புடையவர்களுக்கு கொடுக்கப்பட்டது, அவற்றில் எவ்வளவு கடன் வாராக்கடன் நிலைக்கு சென்றது என்பதனை வெளிப்படையாக குறிப்பிட்ட வேண்டும்.
இந்த விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும். தேவைப்பட்டால் வங்கிகளுக்கு முழு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். முழுத்தொகையை ஒதுக்கீடாக வைத்திருப்பதை கட்டாயப்படுத்தும். மேலும் கூட்டுறவு வங்கிகளின் இயக்குனர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு கடன் ஜாமீன் வழங்கக்கூடாது.
இந்த கட்டுப்பாடுகள் வங்கியின் நிர்வாகிகளுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் மட்டும் பொருந்தும். பொதுமக்கள் எடுக்கும் வீட்டுக்கடன், கல்விக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன் போன்றவற்றுக்கு இந்த வரம்புகள் எதுவும் பொருந்தாது. இது அடுத்தாண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.