10 ரூபாய் நாணயம் செல்லுமா செல்லாதா? - ரிசர்வ் வங்கி விளக்கம்!
இந்தியாவில் ரூ.10 நாணயம் குறித்து ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.
10 ரூபாய் நாணயம்
இந்தியாவில் ஒரு சில பகுதிகளில் 10 ரூபாய் நாணயம் வாங்கப்படுவதில்லை. சில பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகளில் பலர் 10 ரூபாய் நாணயங்களை ஏற்பது இல்லை. முக்கியமாக திண்டுக்கல் மாவட்டம், பழனி போன்ற சுற்றுலா தலங்களில் மக்கள் 10 ரூபாய் நாணயங்களை ஏற்க மறுக்கின்றனர்.
இந்த நாணயம் செல்லாது என்று மக்கள் நினைப்பது தான் காரணம். இதனை தெளிவுபடுத்த மத்திய அரசு நிதி வட்டாரங்கள் முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி
இந்நிலையில், மத்திய அரசு தெரிவித்த தகவலில், பல்வேறு அளவுகள் வடிவமைப்புகளில் ₹ 10 நாணயம் இந்திய அரசாங்கத்தின் அதிகாரத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு, இந்திய ரிசர்வ் வங்கியால் விநியோகிக்கப்படுகிறது. அவை எல்லாம் செல்ல கூடியது. அவை சட்டப்பூர்வ டெண்டர் மற்றும் அனைத்து பரிவர்த்தனைகளிலும் பயன்படுத்தப்படலாம்.
பொதுமக்கள் தங்கள் அனைத்து பரிவர்த்தனைகளிலும் 10 ரூபாய் நாணயத்தை எந்த தயக்கமும் இல்லாமல் சட்டப்பூர்வமான டெண்டராக ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும், இது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தவுள்ளதாக நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.