பத்து ரூபாய்க்கு பிரியாணி.. அதுவும் நாணயத்திற்காம் - முண்டியடித்த மக்கள்
10 ரூபாய் நாணயத்துக்கு பிரியாணி விற்பனை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரூ.10 நாணயம்
10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்கிற வதந்தி மக்களிடையே பரவிய நிலையில் உள்ளது. அதனால் நாணயங்களை வாங்க மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த வதந்தியை நீக்க அரசு மற்றும் சில வணிகர்களும் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வரிசையில், கடலூர் மக்களிடையே 10 ரூபாய் நாணயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சுவாரஸ்ய முன்னெடுப்பு அரங்கேறியது. ராமநத்தம் அடுத்துள்ள புதுக்குளத்தை சேர்ந்தவர் ரமேஷ். நேற்று புதிதாக திறந்த பிரியாணி கடையில் 10 ரூபாய் நாணயத்துக்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்தார்.
பிரியாணி கடை
இதனை அறிந்ததும் அப்பகுதி மக்கள் 10 ரூபாய் நாணயங்களை எடுத்துக் கொண்டு பிரியாணி கடையை நோக்கி விரைந்தனர். தொடர்ந்து, 100-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸார் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தினர்.
இதுகுறித்து கடை உரிமையாளர் கூறுகையில், நான் சென்னையில் பிரபல நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்தேன். அங்கிருந்து சொந்த ஊர் வந்த நான், இங்கு புதிதாக பிரியாணி கடையை திறந்தேன்.
தற்போது 10 ரூபாய் நாணயம் ஒரு சில கடைகளில் வாங்க மறுத்துவருவதால், அதுபற்றி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தேன். அதன்படி, கடை திறந்து முதல்நாளான நேற்று, 10 ரூபாய் நாணயத்துக்கு பிரியாணி வழங்கினேன். மக்களும் ஆர்வமுடன் வாங்கி சென்றதாக தெரிவித்தார்.