கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு திடீர் தடை உத்தரவு; வாடிக்கையாளர்கள் பணத்திற்கு பாதிப்பா?
கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
கோட்டக் மஹிந்திரா
இந்தியாவில் உள்ள பல வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. அதில் ஏதேனும் விதிமுறைகளை நிறுவனங்கள் மீறி செயல்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரிசர்வ் வங்கி அதிரடியாகத் தடை விதித்துள்ளது.
தகவல் தொழில்நுட்பம் தொடர்பான குறைபாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கி தனது ஆன்லைன் மற்றும் மொபைல் வங்கி சேனல்கள் வழியாக புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும், புதிய கிரெடிட் கார்டுகளை வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் பணம்
கடந்த 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்கான ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட திருத்த நடவடிக்கை விதிமுறைகளை தனது ஐடி கட்டமைப்பில் கடைபிடிக்க கோடக் மஹிந்திரா வங்கி தவறியுள்ளது. இதன் காரணமாக அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்று தெரியவந்துள்ளது.
இந்த தடையால், கோடக் மஹிந்திரா வங்கியின் வாடிக்கையாளர்கள், வாடிக்கையாளர்களின் பணம், வாடிக்கையாளர்களின் சேவை ஆகியவற்றில் எவ்விதமான பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடையினால் கோடக் மஹிந்திரா வங்கியின் வளர்ச்சியை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
காரணம் இவ்வங்கி தனது பெரும்பாலான புதிய வாடிக்கையாளர்களை ஆன்லைன் வாயிலாகவும், மொபைல் சேவை வாயிலாகவும்தான் பெறுகிறது.
இதனை தொடர்ந்து, தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை வலுப்படுத்த புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், ரிசர்வ் வங்கியுடன் இணைந்து, இருப்புச் சிக்கல்களை விரைவாகத் தீர்ப்போம் என்றும் கோடக் மஹிந்திரா வங்கி தெரிவித்துள்ளது.