அண்ணாமலை போன்ற அரைவேக்காடு தலைவர்களால் பாஜகவுக்கு பின்னடைவு - ஆர்.பி.உதயகுமார்
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
எடப்பாடி பழனிசாமி
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் தன்னால்தான் பாஜக வளர்ந்துள்ளது போன்ற பிம்பத்தை உருவாக்கி உள்ளதாகவும், அரசியல் தலைவர்கள் குறித்து தொடர்ந்து பொய் தகவல்களை பரப்பி வருவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலடியாக, விக்கிரவாண்டி தொகுதியில் பாமக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தபோது பிரதமர் மோடியின் முதுகில் குத்தியவர் எடப்பாடி பழனிசாமி, நம்பிக்கை துரோகி என்ற பெயர் அவருக்குத்தான் பொருத்தமாக இருக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்திருந்தார்.
ஆர்.பி.உதயகுமார்
இந்நிலையில் இன்று, மதுரை காந்தி மியூசியத்தில், எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
இதில் அவர் பேசியதாவது, "15 மத்திய அமைச்சர்கள், பிரதமர் என தொடர்ந்து பிரசாரம் செய்தும் பாஜகவால் தமிழ்நாட்டில் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு கிடைத்த இந்த வாக்குகள்அண்ணாமலை முகத்திற்காக கிடைத்தது இல்லை. தினகரன், ஜான்பாண்டியன், சரத்குமார், பாரிவேந்தர் உள்ளிட்டோரை காட்டியே வாக்கு சேகரித்தார். அண்ணாமலை திட்டமிட்டு பாஜகவில் உள்ள முன்னணி தலைவர்களை புறந்தள்ளி வைத்துவிட்டு செயல்படுவதாக அவரது கட்சியினரே கூறுகிறார்கள்.
கடந்த தேர்தலின் போது 5.5 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற மோடியே இந்த தேர்தலில், 5 சுற்றுகளில் பின்தங்கி 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றுள்ளார். மெஜாரிட்டி இல்லாமல் மைனாரிட்டி அரசாக தற்பொழுது பாஜக கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் உள்ளது.
அண்ணாமலை
அண்ணாமலை போன்ற அனுபவமில்லாத, தகுதியில்லாத, அரைவேக்காடு தலைவர்களால்தான் இன்று பாஜகவுக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தியே இவ்வளவு வாக்குகளை பெற்றது. அதிமுக வளர்ச்சியையும், எடப்பாடி பழனிசாமி வளர்ச்சியையும் அண்ணாமலையால் தாங்கி கொள்ள முடியாமல் வார்த்தையை கொட்டுகிறார்.
துரோகி என்ற வார்த்தையை அண்ணாமலை வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால் அண்ணாமலையை எதிர்த்து சிறை நிரப்பும் போராட்டம் உள்ளிட்ட எந்த போராட்டத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். தலைமை பண்புக்கான அடையாளம் ரகசியம், நம்பிக்கை காப்பாற்றப்பட வேண்டும். நாளை இவர் டெல்லி தலைவர்கள் பேசியதை கூட வெளியிடுவார். எனவே டெல்லி தலைமை உஷாராக இருக்க வேண்டும்." என பேசியுள்ளார்.