தி.மு.க - பா.ஜ.க திடீர் பாச உறவு காட்டிக்கொள்வதில் என்ன மர்மம் உள்ளது? ஆர்.பி.உதயகுமார்!
பா.ஜ.க மீது தி.மு.க காட்டும் இந்த திடீர் பாச உறவின் மர்மம் என்ன? என்று ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
திடீர் பாச உறவு..
மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், பா.ஜ.க.வை தமிழ்நாட்டிற்குள் விட மாட்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
ஆனால் ரூ.100 நாணயம் வெளியீட்டு விழாவின் மூலம் பா.ஜ.க.வை சிவப்பு கம்பளம் விரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். 'Go Back Modi' என கூறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்,
தற்போது 'Welcome Modi' என வரவேற்கிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயம் வெளியீட்டு விழா மத்திய அரசு நிகழ்ச்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் மாநில அரசு தான் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கியுள்ளது.
ஆர்.பி.உதயகுமார்
மத்திய அரசு விழா என்று மாநில அரசு சொல்வது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல். தி.மு.க - பா.ஜ.க திடீர் பாச உறவு காட்டிக்கொள்வதில் என்ன மர்மம் உள்ளது? தமிழக மக்களை ஏமாற்றும் வகையில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் பா.ஜ.க.வோடு இணக்கம் காட்டி வருகிறார்.
பா.ஜ.க உடன் ரகசிய கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றாதீர்கள். பாஜக - திமுக இடையேயான உறவை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அரசியல் அனுபவமும் புரிதலும் இல்லாத தலைவராக அண்ணாமலை உள்ளார்.
அண்ணாமலைக்கு இன்னும் அரசியல் அனுபவம் தேவை. அண்ணாமலைக்கு தமிழகத்தின் நிலவரமும், கலவரமும் தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.