அஸ்வினுக்கு நடந்த அவமானம்; ஒருநாள் உண்மை உடைப்பார் - கொதித்த முன்னாள் வீரர்
அஸ்வின் அவமானப்படுத்தப்பட்டது குறித்து முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தகவல் தெரிவித்துள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வின்
இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டிக்கு பின் ஓய்வு பெற்றிருந்தார்.
அவர் பாதி தொடரிலேயே ஓய்வு பெற்று வெளியேறியது ஏன்? என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிய வண்ணம் இருந்தனர். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் மனோஜ் திவாரி, "அஸ்வின் அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறார்.
வாஷிங்டன் சுந்தர், தனுஷ் கோட்டியான் போன்ற தரமான ஸ்பின்னர்கள் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறார்கள். ஆனால், அஸ்வின் அளவு சாதித்த ஒரு வீரருக்கு பதிலாக உள்ளூர் தொடரில் வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்ய என்ன காரணம்?
முன்னாள் வீரர் ஆதங்கம்
இந்திய டெஸ்ட் அணியில் ஏற்கனவே ஜடேஜா இருக்கிறார், குல்தீப் யாதவ் இருக்கிறார். ஆனால், நியூசிலாந்து தொடரில் அஸ்வினை விட வாஷிங்டன் சுந்தர் அதிக ஓவரை வீசினார். இது அஸ்வினுக்கு அவமானம் இல்லையா? அவர் இவற்றையெல்லாம் கடந்து சென்று விட்டார்.
பல போட்டிகளை வென்று கொடுத்து பிறகும் இதை அவர் சாதாரணமாக கடந்து சென்று விட்டார். அஸ்வின் மிகவும் நல்லவர் என்பதால் இதை நம்மிடம் சொல்ல மாட்டார். ஆனால், ஒரு நாள் நிச்சயமாக தனக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்வார். அணித் தேர்வில் இது சரியான நடைமுறை அல்ல.
அஸ்வின் போன்றவர்களும் இந்திய அணிக்காக ஆடும் வீரர்கள் தான். அவர்களையும் முதுகில் தட்டிக் கொடுத்து, மரியாதையுடன் நடத்த வேண்டும்." இவ்வாறு மனோஜ் திவாரி பேசி இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.