500-வது விக்கெட் வீழ்த்திய நாள்; ஐசியூவில் அம்மா.. உடைந்த அஸ்வின் - மனைவி பேட்டி!
3-வது டெஸ்ட் போட்டியின் போது ரவிச்சந்திரன் அஸ்வின் விலகியதற்கான காரணம் குறித்து அவரின் மனைவி பிரீத்தி நாராயணன் பேட்டியளித்துள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வின்
இங்கிலாந்து-இந்தியா அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தரம்சாலாவில் தொடங்கவுள்ளது. இது இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும்.
முன்னதாக நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் 500-வது விக்கெட்டை வீழ்த்தி அஸ்வின் சாதனை படைத்தார். ஆனால் அன்றைய ஆட்டத்தின் முடிவிலேயே திடீரென அஸ்வின் பாதியோடு விலகுவதாக அறிவிக்கப்பட்டது. தனது தாயின் உடல்நிலை மோசமாகியதால் அவர் அவசரமாக சென்னை திரும்பினார். பின்னர் 4வது நாளின் உணவு இடைவேளையின் போது மீண்டும் இணைந்தார்.
இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வினின் மனைவி பிரீத்தி நாராயணன் அளித்துள்ள பேட்டியில் "அஸ்வின் 500வது விக்கெட்டை வீழ்த்திய பின் பலரும் செல்ஃபோனில் அழைத்து வாழ்த்து கூறினார்கள். எங்களின் இரு மகள்களும் பள்ளியிலிருந்து வந்து அஸ்வின் சாதனையை கொண்டாடினார்கள். அப்போது தான் எனது மாமியார் திடீரென கொலாப்ஸ் ஆகி கீழே விழுந்தார்கள்.
அடுத்த சில மணி நேரங்களில் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனையில் இருந்தோம். அப்போது அம்மாவின் உடல்நிலை விவகாரம் குறித்து அஸ்வினுக்கு சொல்ல வேண்டாம் என்று முடிவு எடுத்தோம்.
ஐசியூவில் அம்மா
ஏனென்றால் ராஜ்கோட் - சென்னை இடையில் நல்ல விமானம் சேவை கிடையாது. அதன்பின் நான் நேரடியாக புஜாரா மற்றும் அவரின் மனைவியின் உதவியை நாடினேன்.
அவர்கள் உடனடியாக தேவையான உதவிகளை செய்ய முன் வந்தனர். ராஜ்கோட்டில் இருந்து எப்படி சென்னை வர முடியும் என்பதை வழியை ஆராய்ந்து முடிவு செய்தோம். அதன்பின்னரே நான் அஸ்வினுக்கு செல்ஃபோனில் அழைத்தேன். ஏனென்றால் மருத்துவர்கள் அஸ்வினை இங்கு வரவழைப்பது நல்லது என்று கூறினார்கள். நான் அவரிடம் இந்த விஷயத்தை கூறிய பின், அஸ்வின் மொத்தமாக உடைந்துவிட்டார்.
செல்ஃபோனில் பேச முடியாமல் சில நிமிடங்கள் கீழே வைத்துவிட்டார். அதன்பின் மீண்டும் எனக்கு அழைத்தார். அம்மா ஐசியூவில் இருந்த போது அஸ்வின் எமோஷனலாக இருந்தார். அதன்பின் இரண்டு நாளில் அம்மாவின் உடல்நிலை முன்னேற்றம் கண்டது. அப்போது நாங்கள் அனைவருமே அஸ்வினை மீண்டும் செல்லுமாறு அறிவுறுத்தினோம்.
ஏனென்றால் ஒரு ஆட்டத்திலிருந்து எந்த சூழலிலும் பாதியோடு அஸ்வின் வந்ததே கிடையாது. இந்திய அணி அந்தப் போட்டியில் தோல்வியடைந்தால் இன்னும் சோகமாக இருப்பார். அதனால் அனுப்பினோம்" என்று தெரிவித்துள்ளார்.