இது ஐபிஎல் தார் சாலை அல்ல.. இதை மாற்ற வேண்டும் - இந்தியாவை எச்சரித்த முன்னாள் வீரர்!
ரோஹித் ஷர்மா ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப ஆடவேண்டும் என்று முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2024 அமெரிக்கா மற்றும் வெஸ்ட் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியானது நியூயார்க்கில் உள்ள நாசவ் கவுன்டி மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 16 ஓவரில் 96 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இதனையடுத்து 97 என்ற சுலப வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 12.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 97 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா அரைசதம் விளாசி 52 ரன்னில் 'ரிட்டயர்ட் ஹர்ட்' ஆனார். டி20 உலகக்கோப்பையில் இதுவரை 7 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இந்த அனைத்து போட்டிகளிலும் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது.
ஐபிஎல் அல்ல..
புதிதாக கட்டமைக்கப்பட்ட நியூயார்க் மைதானத்தில் செயற்கையாக பொருத்தப்பட்டுள்ள பிட்சில் வேகம், பவுன்ஸ் அதிகமாக இருப்பதால் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட தடுமாறுகின்றனர். இந்நிலையில் ரோஹித் ஷர்மா ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப ஆடவேண்டும் என்று முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
அதிரடியாக ஆடவேண்டுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் "இல்லை.. நீங்கள் நிலைமைகளுக்கு ஏற்ப உங்களின் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். வெவ்வேறு ஆடுகளங்களுக்கு ஏற்ப வெவ்வேறு ஷாட்களை விளையாட வேண்டும். இது ஐபிஎல் அல்ல.. அதிக ரன்களை குவிக்கும் தார் சாலைகள் இங்கே இல்லை.
எனவே இங்கே நீங்கள் உங்கள் ஆட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். ஆடுகளத்தில் இருக்கும் வேகம் மற்றும் பவுன்ஸிற்கு தகுந்தார் போல், இயல்பை விட கூடுதலாக 3-4 பந்துகளை பார்த்து விளையாடி பின்னர் உங்கள் வழியில் விளையாட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.