ஐஜேகே - பாஜக இணைந்து தமிழகத்தை ஆளும் நிலை வரும் - ரவி பச்சமுத்து உறுதி!
இந்திய ஜனநாயக (ஐஜேகே) கட்சி சார்பில் தேசம் காப்போம், தமிழை வளர்ப்போம் என்ற தலைப்பில் மாநில மாநாடு திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூரில் நடைபெற்றது.
தேசம் காப்போம், தமிழை வளர்ப்போம்
இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை பங்கேற்றார். மாநாட்டில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து ஐஜேகே நிறுவனர் டி.ஆர். பாரிவேந்தர் பேசுகையில், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவார். தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய கேடு.
மத்திய அரசை ஒன்றிய அரசு என்று உச்சரிக்கும் இவர்கள், இந்திய மக்களிடையே பிரிவினைவாதத்தை தூண்டவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதை வரவுள்ள மக்களவைத் தேர்தலில் மக்கள் புரிந்து கொண்டு வாக்களிப்பார்கள் எனத் தெரிவித்தார்.
அதன்பின், மாநாட்டுக்கு தலைமை வகித்து, ஐஜேகே கட்சியின் தலைவர் ரவிபச்சமுத்து பேசும்போது, பிரதமர் நரேந்திர மோடி வழியில் செயல்படுபவர் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர். இலவசங்கள் தேவையில்லை என்பதை ஐஜேகே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மக்களை சுயமாக வாழ வைக்கும் பொறுப்பு ஐஜேகேவுக்கு உள்ளது. ஐஜேகே-பாஜக இணைந்து தமிழகத்தை ஆளும் நிலை வரும். அப்போது அடித்தட்டு மக்களின் நலன் காக்கப்படும் என்றார்.
ஐஜேகே மாநாடு
அதனைத் தொடர்ந்து அண்ணாமலை பேசுகையில், ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாகட்டும், தமிழ் மொழியை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதாகட்டும், பத்தாண்டு காலமாக நம்முடைய தமிழ்க் கலாசாரத்தின் மாண்பையும் பெருமையையும் இந்திய மக்களும், உலக மக்களும் கண்டு வருகின்றனர். இதற்கு பிரதமர் நரேந்திர மோடியே காரணம்.
2026 பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் இல்லாத ஆட்சி மலரும். அப்போது, தமிழ்க் கலாசாரத்தின் தொன்மை புரிந்து கொள்ளப்படும். தமிழக எம்.பி.-க்களில் பெரம்பலூர் தொகுதி எம்பி டி.ஆர். பாரிவேந்தர் மட்டுமே தனது கடமையை சிறப்பாக செய்திருக்கிறார்.
பெரம்பலூர் தொகுதியில் ரயில் போக்குவரத்தை ஏற்படுத்துவது பாரிவேந்தரின் முக்கிய திட்டங்களில் ஒன்று. அத் திட்டத்தை ரயில்வே நிதி நிலை அறிக்கையில் இடம்பெறச் செய்துள்ளார். அடுத்து வரும் பாஜக ஆட்சியில் இத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அத்திட்டத்தை அவரே தொடங்கி வைப்பார்.
அவரை மீண்டும் வெற்றி பெறச் செய்வது பெரம்பலூர் தொகுதி மக்களின் தலையாயக் கடமையாகும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் காமராசர் மக்கள் கட்சி நிறுவனர் தமிழருவி மணியன், ஜஜே கே மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ஜெயசீலன், பொருளாளர் ராஜன், முதன்மை செயலாளர் சத்தியநாதன், முதன்மை அமைப்பு செயலாளர் வெங்கடேசன், தலைமை நிலைய செயலாளர் வரதராஜன், இணை பொதுச்செயலாளர் லீமா ரோஸ் மார்ட்டின், மகளிர் அணி செயலாளர் அமுதா ராஜேஸ்வரன், துணைத் தலைவர்கள் நெல்லை ஜீவா, ஆனந்த முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும், தொண்டர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.