ஒரே மேடையில் அண்ணாமலையும், மோடியும்; குவிந்த தொண்டர்கள் - அதிர்ந்த பல்லடம்!
இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வருகை தந்துள்ளார்.
பிரதமர் மோடி
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை மேற்கொண்டிருந்தார். அது இன்றுடன் நிறைவடைகிறது. இதனையொட்டி, திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் பிரதமர் கோவை வந்துள்ளார்.
அங்கிருந்து சூலூர் விமானப்படைத் தளத்துக்குச் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் விழா நடைபெறும் மாதப்பூர் வந்தடைந்தார். தொடர்ந்து, பல்லடம் அடுத்த மாதப்பூரில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளார்.
அவருக்கு அண்ணாமலை ஜல்லிக்கட்டு காளையை பரிசாக வழங்கினார். மஞ்சள் கிழங்கு மாலை அணிவிக்கப்பட்டது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இன்று தமிழகம் வந்துள்ள நான் எம்ஜிஆரை நினைத்து பார்க்கிறேன்.
தமிழகம் வருகை
எம்ஜிஆர் குடும்பத்துக்காக பணியாற்றிவர் அல்ல, மக்களின் நலனிற்காக பணியாற்றியவர். ஏழைகளுக்கு கல்வி, மருத்துவ வசதி வழங்கியதால் மக்களின் மனதில் இப்போதும் நிலைத்திருப்பவர். எம்.ஜி.ஆருக்கு பிறகு நல்ல ஆட்சி கொடுத்தது அம்மா ஜெயலலிதா தான். அவருடன் சில ஆண்டுக்காலம் நான் பணியாற்றும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.
இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் மாறும். தமிழகத்தில் பரபரப்பாக பேசப்படும் கட்சி பாஜகதான். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியில் இல்லாவிட்டாலும், பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் பொய் பேசியவர்களின் ஊழல் வெளியே வந்துள்ளது.
காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு தமிழ்நாட்டிற்கு தந்ததை விட பாஜக அரசு அதிகளவில் தந்துள்ளது எனப் பேசினார். இந்தக் கூட்டத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழருவி மணியன், ஜான் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இதில் கலந்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சமக தலைவர் சரத்குமார் ஆகியோர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.