9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை!
9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
9 வயது சிறுமி
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான தேவராஜ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 9 வயது சிறுமியைத் தனியாக அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி தனக்கு நேர்ந்தவை குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் காங்கேயம் மகளிர் காவல்துறை நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேவராஜைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடுங்காவல் தண்டனை
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஸ்ரீதர் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது .
அதன்படி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தேவராஜுக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை,
ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடாக வழங்க அரசுக்குப் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து தொழிலாளி சிறையில் அடைக்கப்பட்டார்.