ராமஜெயம் கொலை வழக்கு - குற்றவாளிகளை நெருங்கிய புலனாய்வு குழு!
அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 2 ரவுடிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
ராமஜெயம் கொலை வழக்கு
கடந்த 012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி தனது வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்ற ராமஜெயம் வீடு திரும்பவில்லை, இதனையடுத்து மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில், காவிரி ஆற்றின் கரையில் இருந்து அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து, தில்லை நகர் போலீசார் முதலில் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.பாரதிதாசன், சிபிசிஐடி, சிபிஐ அமைப்புகள் 10 ஆண்டுகள் விசாரணை நடத்தியும் கொலைக்கான நோக்கம் கண்டறியப்படவில்லை எனக்கூறி,
ரொக்க பரிசு
வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டார். தூத்துக்குடி எஸ்.பி.-யாக இருந்த ஜெயக்குமார் தலைமையில், அரியலூர் டி.எஸ்.பி. மதன், சென்னை சிபிஐ-யை சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டனர்.
இதனையடுத்து, கொலையாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும் துப்பு எதுவும் கிடைக்கவில்லை. இதனிடையே, சிறப்பு புலனாய்வு குழு நீதிமன்றத்தில் தங்கள் விசாரணை அறிக்கையை இரண்டு முறை தாக்கல் செய்து மேலும் இந்த வழக்கில் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
தீவிர விசாரணை
இந்நிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.பாலன் கொலை வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல் கணேசன் புதுக்கோட்டை செந்தில் ஆகிய இரு ரவுடிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், புதிதாக 4 பேரிடம் விசாரணை நடைபெற்றதாக சிறப்பு புலனாய்வு குழு தகவல் தெரிவித்துள்ள நிலையில் குற்றவாளியை விரைவில் நெருங்கி விடுவோம் என தெரிவித்துள்ளது.