குற்றவாளிகளை கண்டுபிடித்தால் ரூ.50 லட்சம் பரிசு - போஸ்டர் ஒட்டும் சிபிசிஐடி போலீஸ்
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளி பற்றி தகவல் கொடுத்தால் ரூ.50 லட்சம் பரிசு என சிவகங்கை முழுவதும் சிபிசிஐடி போலீஸ் போஸ்டர் ஒட்டி வரும் சம்பவம் பேசு பொருளாகியுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி திமுக முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கல்லணை சாலையில் உள்ள காவிரிக் கரையோரம் கண்டெடுக்கப்பட்டார்.
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் 10 ஆண்டுகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை விசாரித்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. தற்போது ராமஜெயம் கொலை வழக்கை காவல்துறை கண்காணிப்பாளா் ஜெயகுமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு தனிப்படை போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. கடந்த மாதம் விசாரணையை துவங்கிய தனிப்படை பல்வேறு தகவல்களை இதில் சேகரித்துள்ளனா்.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு தங்கள் அறிக்கையை தாக்கல் செய்த நிலையில், அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வருகிற ஜூன் 10 ஆம் தேதி அடுத்தகட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்தது.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருந்தால் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறும் அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்றும், ரூ.50 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் தெரிவித்து சிபிசிஐடி போலீஸ் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.