தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம் நடைபெறும் - ராமதாஸ் எச்சரிக்கை
தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் போராட்டம் நடத்தி அரசை பணிய வைப்போம் என ராமதாஸ் பேசியுள்ளார்.
ராமதாஸ்
வன்னியர் சங்கம் 44 ஆண்டுகளை நிறைவு செய்து 45 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அதனை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள வன்னியர் சங்கத்தின் கோடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
இதில் பேசிய அவர், வன்னியர் சங்கம் 1980 ஜூலை 20 ம் தேதி தொடங்கப்பட்டது. அதன் முதல் கோரிக்கையாக ஜாதி வாரி கணக்கெடுப்பு அதனடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அந்த வகையில் வன்னியர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். பட்டியல் இன மக்களுக்கு 18% ஆக உள்ளதை உயர்த்தி 22 சதவீத இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என வன்னியர் சங்கம் துவங்கிய போதே இது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இட ஒதுக்கீடு
அதன் பிறகு 42 ஆண்டுகளாக 90,000 கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளை சொல்லி சொற்ப இட ஒதுக்கீட்டை பெற்றோம். அதற்காக தொடர் சாலை மறியல், ரயில் மறியல் என நடத்தினோம்.
கடந்த அதிமுக ஆட்சியின் போது 10.5% இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும் என தற்போதுள்ள முதல்வரை கோட்டையில் நான் நேரில் சந்தித்து முறையிட்டும், இன்று வரை நிறைவேறவில்லை.
போராட்டம்
42 ஆண்டுகள் கடந்து, 43 ஆம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கிறோம். ஆனால் அந்த கோரிக்கை இன்னும் அப்படியே உள்ளது. அதற்காக மீண்டும் தமிழ்நாடே ஸதம்பிக்கும் வகையில், ஒரு போராட்டத்தை நடத்தினால் தான் இந்த அரசு பணியும் என நம்புகிறோம். அதற்கு இப்போது இருக்கிற இளைஞர்கள் ஆர்வமாக துடிப்போடு இருக்கிறார்கள்.
ஏனென்றால் அவர்கள் இவ்வளவு நாள் யாரால் ஏமாற்றப்பட்டோம் என தெரியாமல் இருந்தார்கள் தற்போது யாரால் வஞ்சிக்கப்பட்டோம் என புரிய வைத்துள்ளோம். அதனால் இளைஞர்கள், மாணவர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். எனவே இந்த போராட்டம் முன்பை விட கடுமையாக இருக்கும் என சொல்லி கொள்ள விரும்புகிறேன்.