வயநாடு நிலச்சரிவைக் காட்டி, முல்லைப் பெரியாறு அணைக்கு.. ராமதாஸ் பரபரப்பு தகவல்!
முல்லைப் பெரியாறு அணையில் தமிழக உரிமையை காக்க வேண்டும். அணை நீர்மட்டத்தை 152 அடியாக்க வேண்டும்" என்று முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேராளாவில் நடந்து வரும் சம்பவங்களை மையப்படுத்தி தமிழக அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
முல்லைப் பெரியாறு
இதுதொடர்பாக ராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கையில்..வயநாடு நிலச்சரிவைக் காட்டி, முல்லைப் பெரியாறு அணைக்கு மூடுவிழா நடத்த வேண்டும் என்பது தான் அங்குள்ள அரசியல் கட்சிகள் மற்றும் செல்வாக்குள்ள மனிதர்களின் நோக்கமாக இருக்கின்றன. இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளை என்னால் கூற முடியும்.
1. வயநாட்டில் ஏற்பட்டது போன்ற நிலச்சரிவு முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் நிகழ்ந்தால், அதனால் பேரழிவு ஏற்படும். அதனால், முல்லைப் பெரியாறு அணையை மூட வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணியும் கடந்த 8ம் தேதி நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியும் போராட்டம் நடத்தின.அத்துடன், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர் பாட்டீலைச் இரு அணிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தும் இதுகுறித்து வலியுறுத்தியுள்ளனர்.
மேத்யூஸ் நெடும்பாறா வழக்கு
2. முல்லைப் பெரியாறு அணை வலிமையாக இல்லை என்பதால், அதன் நீர்மட்டத்தை இப்போதுள்ள 142 அடியிலிருந்து 120 அடியாக குறைக்க வேண்டும் என்று கேரளத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பாறா வழக்குத் தொடர்ந்துள்ளார்.
3. முல்லைப் பெரியாறு அணையை கட்டுவதற்கான நிலத்தை 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்குவது குறித்து திருவாங்கூர் சமாஸ்தானத்திற்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையே கடந்த 1886-ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் செல்லுமா? என்பதை ஆய்வு செய்வதற்கு ஒப்புக்கொண்டுள்ள உச்ச நீதிமன்றம், அது குறித்து செப்டம்பர் 30-ம் தேதி விசாரிக்கவுள்ளது.
4. முல்லைப்பெரியாறு அணை விரைவில் இடிந்துவிடும். அதனால் கேரளத்தில் 5 மாவட்டங்கள் அழிந்து விடும் என்று பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் பொய்பரப்புரைகள் செய்யப்படுகின்றன. வயநாடு நிலச்சரிவால் முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கேரள நீர்வளத் துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் கூறினாலும் கூட, முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிராக செய்யப்படும் பரப்புரைகளுக்கு கேரள அரசின் மறைமுக ஆதரவு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
அனைத்து மக்களையும் கலங்க வைத்த பேரிடரைக் கூட, தமிழகத்திற்கு எதிராக பயன்படுத்திக் கொள்ள கேரள அமைப்புகள் முனைவது வருத்தமளிக்கிறது. இதை அனுமதிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.