சாதி வாரி கணக்கெடுப்பு; அனைத்து சமூகங்களும் ஒன்று திரள வேண்டும் - ராமதாஸ் அழைப்பு

Dr. S. Ramadoss Tamil nadu
By Karthikraja Aug 06, 2024 08:30 AM GMT
Report

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி அனைத்து சமூகங்களும் கோரிக்கை வைக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்துகிறார்.

ராமதாஸ்

சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூகநீதியில் தமிழகம் பெருமைப்பட்டுக் கொள்ளும் விஷயம் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 69% இட ஒதுக்கீட்டை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்பது தான்.

ramadoss pmk

ஆனால், அந்த பெருமை அச்சாணி இல்லாத தேரைப் போலத் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தத் தேர் எப்போது கவிழும் என்பது தெரியாது. ஏனெனில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி 69% இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று 2010 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை தமிழக அரசு இன்னும் செயல்படுத்தாத நிலையில், அதை எதிர்த்து புதிய வழக்குகள் தொடரப்பட்டிருப்பது தான். 

பாராளுமன்றத்தில் சாதி சர்ச்சை; இது தான் ராகுல் காந்தி சாதி - காங்கிரஸ் பதில்

பாராளுமன்றத்தில் சாதி சர்ச்சை; இது தான் ராகுல் காந்தி சாதி - காங்கிரஸ் பதில்

69% இட ஒதுக்கீடு

அவ்வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது, எந்த நேரமும் 69% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் ஆபத்து இருக்கிறது. அதைத் தடுப்பதற்கான ஒரே தீர்வு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விவரங்களை வெளியிடுவது தான்.

கல்வியிலும், சமூகநிலையிலும் பின்தங்கிக் கிடக்கும் சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாதது எந்த அளவுக்கு மோசமான சமூகநீதியோ, அதை விட மோசமான சமூகநீதி அந்த சமூகங்களின் மக்கள் தொகைக்கு பொருந்தாத வகையில் இட ஒதுக்கீடு வழங்குவது தான். அதை விடக் கொடுமை, சூறைத் தேங்காயை உடைத்து வலிமையுள்ளவர்கள் பொறுக்கிக் கொள்ளுங்கள் என்பதைப் போல, நூற்றுக்கணக்கான சாதிகளை ஒரே பிரிவில் அடைத்து, மிகக் குறைந்த அளவிலான இட ஒதுக்கீட்டைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்பது. இவை இரண்டுமே உண்மையான சமூகநீதி அல்ல.

நீதியரசர் ரோகிணி ஆணையம்

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 27% இட ஒதுக்கீட்டால் பயனடைந்தவர்கள் குறித்து நீதியரசர் ரோகிணி ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகள் மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியவை. ஓபிசி வகுப்பில் 2633 சாதிகள் உள்ளன. 

ramadoss pmk

அவர்களில் 75 விழுக்காடான 1977 சாதிகளுக்கு 2.66% இடங்கள் மட்டுமே கிடைக்கின்றன. அவர்களிலும் 983 சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டின் பயன்கள் இதுவரை கிடைக்கவில்லை. அதேநேரத்தில், 656 சமூகங்கள், அதாவது 25 விழுக்காட்டினர் 97.34% இடங்களைக் கைப்பற்றிக் கொள்கின்றனர் என்பது தான் ரோகிணி ஆணையம் சொல்லும் உண்மையாகும். தமிழ்நாட்டின் நிலைமை ஆராயப்பட்டால், இதை விட மோசமான பாகுபாடுகள் இழைக்கப்பட்டிருப்பது தெரியவரும்.

பீஹார் சாதிவாரி கணக்கெடுப்பு

இந்திய மானுடவியல் கணக்கெடுப்பு நிறுவனம் கடந்த 1985 முதல் 1992 வரை 7 ஆண்டுகள் நடத்திய கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் 364 சாதிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த சாதிகள் குறித்த அனைத்து விவரங்களையும் சேகரித்து அவர்களுக்கு சமூக நீதி வழங்குவது தான் சாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கம்.

கடந்த ஆண்டு பிஹாரில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், கல்வித் தகுதி, வைத்திருக்கும் வாகனம், மடிக்கணினி உள்ளதா? சொந்த வீடு உள்ளதா? மாத வருமானம் என 17 வகையான விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அந்த விவரங்களைக் கொண்டு சமூகப்படிநிலையில் அடித்தட்டில் உள்ள மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது மட்டுமின்றி, வீடு கட்டித் தருவது, தொழில் தொடங்க கடன் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிகர்நோக்கு நடவடிக்கைகளை பிஹார் அரசு மேற்கொண்டு வருகிறது.

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த சட்டப்படியாக எந்தத் தடையும் இல்லை. பிஹாரில் நடத்தப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பு செல்லும் என பட்னா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றமும் அதற்கு தடை விதிக்கவில்லை.

தமிழ்நாடு

13 கோடி மக்கள்தொகை கொண்ட பிஹாரில் ரூ. 500 கோடிக்கும் குறைவான செலவில் 45 நாட்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முடிகிறது என்றால், 7.64 கோடி மட்டுமே மக்கள்தொகை கொண்ட தமிழ்நாட்டில் இன்னும் குறைவான செலவில், குறைவான நாட்களில் இன்னும் சிறப்பாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடிக்க முடியும் என்பது உறுதி.

எனவே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக அனைத்து சமூகங்களும் ஒன்று திரள வேண்டும். நாம் கொடுக்கும் அழுத்தம் ஆட்சியாளர்களை அசைத்துப் பார்க்கும். அந்த நம்பிக்கையுடன் தமிழகத்தின் அனைத்து சமுதாயங்களும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும். எனத் தெரிவித்துள்ளார்.