வெள்ளை அறிக்கை வேண்டும்; முதல்வர் ஸ்டாலின் ஓடி ஒளிவது ஏன்? ராமதாஸ் கேள்வி
தமிழகத்துக்கு வந்துள்ள தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டுமென ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டுக்கு 9.99லட்சம் கோடி மதிப்பில் தொழில் முதலீடுகள் வந்ததாகவும், 889 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாகவும் இதனால் 19 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் இதுதொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கடந்த 8 ஆம் தேதியே தான் வலியுறுத்தியதாகவும் ஆனால் வெள்ளை அறிக்கை வெளியிடுவது மரபு இல்லை எனக்கூறி முதல்வர் ஸ்டாலின் ஓடி ஒளிவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
வெள்ளை அறிக்கை
இன்றைக்கு, மரபு இல்லை என்று சொல்லும் இதே முதல்வர் ஸ்டாலின் தான் கடந்த அதிமுக ஆட்சியில் தொழில் துறை முதலீடுகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று ஆயிரம் முறை கோரினார். அப்போது மரபுகள் இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடிக்கு தொழில்கள் தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டிருந்தாலும் ரூ.17,616 கோடிகள் மட்டுமே இதுவரை முதலீடு செய்யப்பட்டுள்ளது. வராத முதலீடுகளை வந்ததாக கூறி மக்களை ஏமாற்றக் கூடாது. எனவே, இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என கூறினார்.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் ஆலோசகர்கள் உள்ளிட்ட பதவிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், நியமனம் செய்யப்பட்டவர்களை தேர்வு செய்ய எந்த போட்டி தேர்வும், இட ஒதுக்கீடும் கடைபிடிக்கவில்லை என்றும் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது சமூகநீதிக்கு எதிரானது என்றும் இது தொடர்பாக அரசு விளக்கமளிக்காவிட்டால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் டாக்டர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
பட்டமளிப்பு விழா
மேலும், "தமிழகத்தில் அரிசி விலை உயர்ந்துள்ளது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஆண்டுக்கு 99 லட்சம் டன் அரிசி தேவை உள்ள நிலையில் 72 லட்சம் டன் அரிசி மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதை சரிசெய்ய தமிழகத்தில் நெல் சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அரிசி உற்பத்தி செய்ய ஏதுவாக மின் கட்டணத்தை குறைக்கவேண்டும்.
தமிழகத்தில், மெல்லும் புகையிலை தடை செய்யப்பட்டு இருந்தாலும் தடையின்றி விற்பனை செய்யப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பே கூல் லிப் புகையிலை விற்பனை தொடங்கியபோதே எச்சரித்தேன். ஆனால், இன்று பள்ளி மாணவர்கள் சகஜமாக அதைப் பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தில் 10 பல்கலைக் கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் உள்ளது. பட்டமளிப்பு விழா நடத்தாமல் இருப்பதால் மாணவர்களை பட்டம் செய்து விட்டுக்கொள் என்று அரசு சொல்கிறதோ என கேள்வி எழுந்துள்ளது" என்று கூறினார்.