விரைவில் ரேஷன் கடைகளில் நெய், பால் பொருட்கள் - அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
மனோ தங்கராஜ்
சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் பொது மேலாளர் மற்றும் துணை பதிவாளர்கள் மாதாந்திர ஆய்வு கூட்டம் அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. இதற்கு பின் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில் அவர் பேசியதாவது, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் ஆவின் பொருட்கள் கூடுதலாக விற்பனை செய்வதற்கும் புதிய ஆவின் பொருட்கள் சந்தைப்படுத்துவதற்கும் முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பண்டிகை காலங்களில் ஆவின் பால் பொருட்கள் சலுகை விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
ரேஷன் கடைகளில் ஆவின்
மேலும் மனித விபத்துக்களை தடுக்கும் வகையில் ஆவின் பொருட்களை தயாரிக்க தானியங்கி எந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அனைத்து பகுதிகளிலும் ஆவின் பால்கள் தடை இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆவின் பால் பொருட்கள், நெய் ஆகியவற்றை ரேஷன் கடையில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வெவ்வேறு அளவுகளில், சிறிய வகை பாக்கெட்டுகளில் ஆவின் நெய் விற்பனை செய்யப்படவுள்ளது" என தெரிவித்தார்.