கருணாநிதி நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழா - அண்ணாமலை, ஈ.பி.எஸ், ரஜினிக்கு அழைப்பு
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா ஆகஸ்ட் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது.
கருணாநிதி நாணய வெளியீட்டு விழா
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜூன் 3 ம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும், திமுக சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தி கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, அவரது உருவம் பொறிக்கப்பட்ட ரூ.100 மதிப்புள்ள நாணயம் வெளியிட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ராஜ்நாத் சிங்
வரும் ஆகஸ்ட் 18 ம் தேதி, மாலை 6:50 மணிக்கு சென்னைகலைவாணர் அரங்கில், தமிழக அரசு சார்பில் நடைபெறும் விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிட்டு உரையாற்றுகிறார். அமைச்சர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார்.
இந்த நாணயத்தில் ஒரு புறம் சிரித்த முகத்துடன், 'முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த நாள் நூற்றாண்டு 1924 - 2024' என ஆங்கிலத்திலும் இந்தியிலும் அச்சிடப்பட்டுள்ளது. மறுபுறத்தில் தேசிய நினைவுச் சின்னத்துடன் ரூ.100 என மதிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர்கள்
இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.
குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.