எலெக்ஷன் டைம் இது...அந்த ஆளுங்கள ஜெயில்'ல தான் போடணும் - ரஜினிகாந்த் ஆவேசம்
அதிரடி தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்துக்கள் கவனம் பெற்றுள்ளது.
ரஜினி பேச்சு
சென்னை வடபழனியில் நடந்த தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் ரஜினிகாந்த் பேசியது வருமாறு,
கடந்த 25 வருடமாக தான் எந்த திறப்பு விழா நிகழ்ச்சிகளுக்கும் போகவில்லை என்று குறிப்பிட்ட ரஜினிகாந்த், ஏனென்றால், எந்த ஒரு கட்டடத்தை திறந்து வைத்தாலும் ரஜினிக்கும் அதில் பங்கு உண்டு. அந்த நிறுவனத்துடன் பார்ட்னராக இருக்கிறார், அந்நிறுவனமே ரஜினியுடைது தான், அவருடைய பினாமி நடத்துறாங்க என்றெல்லாம் சொல்கிறார்கள் என நகைச்சுவையாக கூறினார்.
தன் உடம்பு பல மருத்துவமனைகளிலிருந்து குணமடைந்திருப்பதாக கூறி, அதன் காரணமாகவே டாக்டர்கள், செவிலியர்கள் மேல் பெரிய மரியாதை உண்டு என்று தெரிவித்து அவர்களின் உதவியால் தான் இன்னும் வாழ்ந்திட்டு இருப்பதாக குறிப்பிட்டார்.
Flats விளம்பரம் கொடுக்கும் போது, அருகில் ரெயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், ஸ்கூல், மளிகை கடை, மார்க்கெட் இருக்கு என்று குறிப்பிடும் நிலையில், ஆனால் மருத்துவமனை இருக்கிறதா..? என்பதை பற்றி விளம்பரம் செய்வதில்லை என சுட்டிக்காட்டினார்.
ஜெயில்ல தான் போடணும்
இப்போது யாருக்கும் எந்த வயதிலும் எந்த நோயும் வருகிறது என்பது தெரியவில்லை என்ற அவர், காற்று -தண்ணீர் என அனைத்துமே மாசடைந்து விட்டதாக குறிப்பிட்டு, குழந்தைகள் மருந்தில் கலப்படம் செய்பவர்களை சாகுறவரைக்கும் ஜெயில்ல தான் போடணும் என ஆவேசமாக கூறினார்.
தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், இந்த நிகழ்ச்சிக்கு வந்த உடனே எதிரே இத்தனை கேமராக்கள் பார்த்ததுமே பயம் வந்துவிட்டதாக குறிப்பிட்டு, இப்போ எலெக்ஷன் டைம் வேற, மூச்சு விடவே பயமா இருக்கு என்றும் நகைச்சுவையாக பேசினார்.