நான் அரசியலுக்கு வந்திருந்தால் இதுதான் நடந்திருக்கும் - ரஜினிகாந்த்
ஜானகி நூற்றாண்டு விழாவில் ஜானகி ராமச்சந்திரன் குறித்து ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா
தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சரும், எம்ஜிஆரின் மனைவியுமான ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் இன்று(24.11.2024) நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில், ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா மலரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அந்த மலரை எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா பெற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து, பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மாலை 5 மணியளவில் எடப்பாடி பழனிசாமி விழாவில் உரையாற்றுகிறார்.
ரஜினிகாந்த்
முன்னதாக நடிகர் ரஜினிகாந்த், ஜானகி ராமச்சந்திரன் குறித்து பேசிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. இதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், "எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அவர் அரசியலுக்கு வந்தது ஒரு அரசியல் விபத்து. இக்கட்டான சூழலில் சிலரின் வற்புறுத்தல் காரணமாக ஜானகி முதலமைச்சர் ஆனார்.
அதன்பிறகு தேர்தல் வந்தபோது ஜானகி, ஜெயலலிதா இரண்டு அணிகளாக பிரிந்து போட்டியிட்டனர். அப்போது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. இரட்டை இலை சின்னம் என்பது அதிமுகவின் பிரம்மாஸ்திரம். அந்த தேர்தலில் ஜானகி தோல்வியை சந்தித்தார்.
நான் அரசியலுக்கு வருவதாக முடிவு செய்து பலரிடம் ஆலோசனை கேட்டபோது பலரும் பல்வேறு கருத்துக்களை சொன்னார்கள். அந்த ஆலோசனைகளை கேட்டால் நிம்மதி பணம் என அனைத்தையும் இழந்திருப்பேன். அரசியல் தெரிந்து சொல்கிறார்களா தெரியாமல் சொல்கிறார்களா என்று நான் யோசித்தேன்.
ஜெயலலிதா
ஜானகி ராமச்சந்திரன் மிகுந்த தைரியத்துடன் இருப்பவர், அவர் தைரியமாக முடிவெடுப்பவர். அதனால்தான் யாருடைய ஆலோசனையையும் கேட்காமல் அரசியல் தனக்கு சரிபட்டு வராது எனவும் நீங்கள்தான் சரியானவர் எனவும் முடிவு செய்து, ஜெயலலிதாவிடம் கட்சியை ஒப்படைத்தார். அது அவருடைய மிகப்பெரிய குணமாகும்.
ஜானகி ராமச்சந்திரனை நான் 3 முறை சந்திதுள்ளேன். அவர் மிகவும் அன்பாக பழகக் கூடியவர். ராமாபுரம் எம்.ஜி.ஆர் வீட்டில் எப்போது போனாலும் உணவு கிடைக்கும். தினமும் 200 முதல் 300 பேர் வரை சர்வசாதாரணமாக உணவு உண்டு செல்வார்கள். இது அனைத்தும் ஜானகி ராமச்சந்திரனின் மேற்பார்வையில் தான் நடக்கும்.
தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் ஜானகி ராமச்சந்திரன், என்பதில் பெருமிதம் கொள்கிறேன். அவருக்கு இந்த நூற்றாண்டு விழாவை விமரிசையாகக் கொண்டாடுவதற்கு, இந்த விழாவுக்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என பேசினார்.