முதல்வன் படத்தில் ரஜினி நடிக்காததற்கு கருணாநிதி காரணமா? - உண்மையை உடைத்த அமைச்சர்
முதல்வன் படத்தில் ரஜினி நடிக்க மறுத்ததற்கு கலைஞர் கருணாநிதி தான் காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வன்
1999 ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மனிஷா கொய்ராலா, ரகுவரன் நடிப்பில் வெளியான திரைப்படம் முதல்வன். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், வைரமுத்து பாடல்களை எழுதி இருந்தார். படத்திற்கான வசனங்களை சுஜாதா எழுதியிருப்பார்.
சாமானிய மனிதன் ஒரு நாள் முதல்வர் நாற்காலியில் இருந்தால் எப்படி இருக்கும் என கதை அமைக்கப்பட்டிருந்தது. படம் முழுக்க அரசியல்வாதிகளை, ஊழலை சாடுவது போல் வசனம் அமைக்கப்பட்டிருக்கும். குறிப்பாக முதல்வராக இருக்கும் ரகுவரனை அர்ஜுன் நேர்காணல் செய்யும் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியதோடு பல்வேறு விருதுகளை குவித்தது.
ரஜினிகாந்த்
இந்த படத்தில் அர்ஜுனுக்கு பதிலாக முதலில் ரஜினிகாந்த் நடிக்க இருந்ததாகவும், ஆனால் கருணாநிதியால்தான் இந்த படத்தில் நடிக்க ரஜினி மறுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த கலந்துகொண்டு நூலின் முதல் பிரதியை பெற்றார்.
அப்பொழுது விழா மேடையில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, முதல்வன் படத்தில் ரஜினியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தபோது கலைஞர் கருணாநிதி தான் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தார். கருணாநிதி முதல்வராக இருக்கும் போது நான் முதல்வராக நடிப்பதா முடியவே முடியாது என சொல்லி மறுத்துவிட்டார் ரஜினி. அந்த அளவுக்கு கலைஞர் கருணாநிதி மீது ரஜினிகாந்த் அன்பு வைத்திருந்ததாக என பேசி இருந்தார்.