அரசியலுக்கு வந்திருந்தா.. நிம்மதி இழந்து.. சீரியஸாக பேசிய ரஜினி - குலுங்கி சிரித்த ஈபிஎஸ்!
அரசியலுக்கு வரப்போவதாக சொன்ன பிறகு நடந்தவை குறித்து ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
ரஜினி..
அதிமுகவின் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன். இவர் தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் ஆவார். அவரது நூற்றாண்டு விழா சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதில் பல்வேறு பிரபலங்களும் கலந்துகொண்டு ஜானகி ராமச்சந்திரன் குறித்த தங்களது நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இதையடுத்து மேடையில் ரஜினிகாந்த் பேசுகையில், “நான் படப்பிடிப்பு தளத்தில் இருந்த போது என்னை அழைத்து சந்தித்தார் ஜானகி ராமச்சந்திரன். திரைப்படங்களில் நான் புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என ஜானகி ராமச்சந்திரனிடம் எம்.ஜி.ஆர். சொன்னதாக அவர் என்னிடம் சொன்னார்.
கட்சிக்காக தான் உழைத்து சம்பாதித்த சொத்தை எழுதிக்கொடுத்தார். அதுதான் தற்போது சென்னை லாயிஸ்ட் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம்.எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி ராமச்சந்திரன் அரசியலுக்கு வந்தது என்பது ஒரு அரசியல் விபத்து.
சிரித்த ஈபிஎஸ்
அரசியலுக்கு வர அவருக்கு கொஞ்சம் கூட ஈடுபாடு இல்லை. சூழ்நிலை காரணமாக அரசியலுக்கு வந்து முதல்வர் பதவியை ஏற்றார். அப்போது அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து இரட்டை இலை முடக்கப்பட்டது. இரட்டை இலை என்பது அதிமுகவின் பிரம்மாஸ்திரம்.
அதிமுக நலனுக்காக ஜெயலலிதாவிடம் கட்சியை ஒப்படைத்து அரசியலை விட்டு விலகினார். அது அவரின் நல்ல குணம்” என்று தெரிவித்துள்ளார். மேலும் தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்த போது நடந்த சம்பவங்களை அவர் பகிர்ந்துகொண்டார்.
“நான் அரசியலுக்கு வரப்போவதாக சொன்ன பிறகு நிறைய பேரை சந்தித்தேன். அப்போது, நிறைய பேர் ஆலோசனை கூறினார்கள். அந்த ஆலோசனைகளை கேட்டிருந்தால் நிம்மதி, பணம் அனைத்தையும் இழந்திருப்பேன். தெரிந்து சொல்கிறார்களா..
தெரியாமல் சொல்கிறார்களா என தெரியாது” என்றும் பகிர்ந்தார். இந்த நிலையில், ரஜினிகாந்த் இவ்வாறு மேடையில் பேசிக்கொண்டு இருந்தப்போது கீழே அமர்ந்திருந்த எடப்பாடி பழனிசாமி விழுந்து விழுந்து சிரித்தார்.