வலுவான எதிர்க்கட்சி - இது ஜனநாயகத்திற்கு தான் நல்லது!! ரஜினி பாராட்டுக்கள்
3-வது முறை பதவியேற்பு
இன்று பிரதமர் மோடி 3-வது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்கவுள்ளார். டெல்லி நகரே விழா கோலம் பூண்டுள்ள நிலையில், சுமார் 7000 விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சுதந்திர இந்தியாவில் தொடர்ந்து 3-வது முறை நாட்டின் பிரதமராக பதவியேற்கும் மோடி, முன்னாள் பிரதமர் நேருவின் சாதனையை இன்று சமன் செய்கிறார். குடியரசு தலைவர் மாளிகையில் இன்று மாலை நிகழவுள்ள இந்த நிகழ்விற்காக ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
தமிழகத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த்'திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இன்று சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட நடிகர் ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார்.
ரஜினி பேச்சு
அப்போது அவர் பேசும் போது, 3-வது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்க உள்ளது ஒரு சாதனை, அவருக்கு பாராட்டுக்கள். இந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் ஒரு வலுவான எதிர்க்கட்சியை தேர்வு செய்திருக்கிறார்கள்.
இது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமான அறிகுறி. அடுத்த 5 ஆண்டுகள் நல்ல ஆட்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். திருமாவளவன், சீமான் ஆகியோரின் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மற்றும் நாம் தமிழர் ஆகியவை மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என கூறி சென்றார்.