அதிமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ2500 - முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அதிமுக ஆட்சிக்கு வந்தால் மாதம் ரூ 2500 பெண்களுக்கு வழங்கப்படும் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.
ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் அதிமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார்.
இதில் அவர் பேசியதாவது, "நாம் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கார்டு உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் எந்த பாகுபாடும் இல்லாமல் 2500 மாத மாதம் கொடுப்போம் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை வைத்தேன். ஏழை மக்களுக்குச் செய்வதற்கு அதிமுகவை தவிர வேறு யாருக்கு தகுதி உள்ளது. கொடுத்து கொடுத்து சிவந்த கரத்தை கொண்ட எம்.ஜி.ஆர் விதை போட்ட கட்சி இது.
மின்கட்டண உயர்வு
தொட்டில் குழந்தை திட்டம் கொண்டு வந்த ஜெயலலிதா வளர்த்த கட்சி அதிமுக. 2 பேரின் கலவையாக உள்ளார் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக தற்போது சரியான பாதையில் செல்கிறது. வரும் ஆட்சி அதிமுக ஆட்சி. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் அதிமுக தான் வெல்லும்.
பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வென்ற பிறகு திமுக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தியுள்ளது. மின் கட்டண உயர்வுக்கு காரணம் கேட்டால் மத்திய அரசு பட்ஜெட்டில் பணம் ஒதுக்காதது தான் காரணம் என சொல்கிறார்கள். அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் எனத் தெரியவில்லை." என பேசியுள்ளார்.