ஆண்களுக்கும் மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை? அமைச்சர் சொன்ன குட் நியூஸ்
ஆண்களுக்கும் மாதம் உரிமை தொகை வழங்குவது தொடர்பாக அமைச்சர் பெரிய கருப்பன் பதிலளித்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை
குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் தோறும் 1000 ரூபாயை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழக அரசால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் பெண்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடியே 32 லட்சம் பயனாளர்கள் பயன்பெற்று வருகின்றனர். புதிய ரேஷன் அட்டைகள் விநியோகிக்கப்படும் நிலையில் வரும் மாதங்களில் இதன் பயனாளர்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
அமைச்சர் பெரிய கருப்பன்
இந்நிலையில் நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளியில் படித்து உயர் கல்விக்கு சென்றுள்ள மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை கோவையில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் அமைச்சர்கள் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் மாணவர்களுக்கு வங்கி அட்டைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகையை தமிழக அரசு வழங்கி வருகிறது. அந்த உரிமைத் தொகை தங்களுக்கு இல்லையே என்ற ஆண்களின் ஏக்கத்தை தீர்த்து வைக்கும் சூழ்நிலை எதிர்காலத்தில் வரும் என பேசியுள்ளார்.