போலீசுக்கு போன் செய்து உதவி கேட்ட திருடர்கள்; நம்ப மறுத்த போலீஸ் - நடந்தது என்ன?
காவல் நிலையத்திற்கு போன் செய்து திருடர்கள் உதவி கேட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் திருட்டு
நாடு முழுவதும் தினமும் பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சிலசமயம் திருட சென்ற வீட்டிலேயே தூங்கி மாட்டிக் கொள்வது போன்ற சம்பவங்கள் நடப்பதுண்டு. ஆனால் ராஜஸ்தானில் திருடர்கள் போலீசுக்கு போன் செய்து உதவி கேட்ட வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோலாயம் பகுதியில் வசித்து வருபவர் மதன் பரீக். கடந்த வியாழக்கிழமை அன்று மதன் பரீக் அருகில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். நள்ளிரவு 2 மணியளவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் நகைகளை கொள்ளையடிக்க தொடங்கியுள்ளனர்.
காவல் நிலையத்திற்கு போன்
அந்த சமயம் தனது அண்ணன் வீட்டிலிருந்து திரும்பி வந்த மதன் பரீக் வீட்டு முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் வீட்டை சூழ்ந்துள்ளனர்.
வெளியே சென்றால் பொதுமக்கள் அடி வெளுத்து விடுவார்கள் என பயந்த திருடர்கள் வீட்டை உள் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு, 100 என்ற எண்ணில் பொலிசாருக்கு போன் செய்து, தாங்கள் ஒரு வீட்டிற்குள் சிக்கியிருப்பதாகவும், எங்களை பாதுகாப்பாக வெளியேற்றுமாறும் தெரிவித்தனர்.
கைது
முதலில் யாரோ தன்னை கேலி செய்து விளையாடுகிறார்கள் என்று நினைத்த போலீசார், சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் அழைப்பு வந்ததும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
ஆனால் வெளியில் இருப்பவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று நினைத்து திருடர்கள் வெளியே வாராமல் மறுபடியும் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து இரண்டு முறை விசில் அடித்து சிக்னல் கொடுக்கும்படி போலீசாரிடம் கேட்டுக்கொண்டனர். வெளியில் நின்றிருந்த போலீசார் இந்த சமிக்ஞையை கொடுத்ததும், திருடர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்தனர்.
திருடர்களை கைது செய்த போலீசார் இவர்கள் நீண்டகாலமாக திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பொதுமக்களின் அடியிலிருந்து தப்பிக்க திருடர்களே காவல் நிலையத்திற்கு போன் செய்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.