மக்களே குடை முக்கியம்.. இன்னும் 6 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
6 நாட்களுக்கு மழை
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று முதல் வரும் 21-ம் தேதி வரை, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (15.08.2023)மற்றும் நாளை (16.08.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலோர பகுதிகள்
தொடர்ந்து, இன்றும் நாளையும், தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இன்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.