கொட்டி தீர்த்த மழை..மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு? வெதர்மேன் விளக்கம்!
மழை நிலவரம் குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மழை
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்ததில் கடந்த சில தினங்கள் கனமழை பெய்தது. எனவே சென்னை மற்றும் பல மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட
நிலையில் சென்ற செவ்வாய் மற்றும் புதன்கிழமை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. பிறகு அந்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் , வடகிழக்கு பருவமழை மற்றும் மேற்கு திசை காற்றின் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே இடி மின்னலுடன் மழை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை முதலே பயங்கர இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
வெதர்மேன்
மழை குறித்து முன்னறிவிப்புகளை வெளியிடும் தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் மழை நிலவரம் குறித்து தனது சமூக வலைதளத்தில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதில், KTCC எனப்படும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு பெல்ட் மற்றும் வேலூர், ராணிப்பேட்டை மற்றும் வட தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்வதாக தெரிவித்துள்ளார்.
இன்று இரவு முதல் நாளை காலை வரை மீண்டும் வட உள் தமிழகம் உட்பட வட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு பகுதிகளிலும் சில இடங்களில் டமால் டுமீல் கிடைக்கும் என இடி மின்னலை குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு வெதர்மேன், இந்த மழை சாமானியர்களின் இன்ப மழை எனவும் தெரிவித்துள்ளார்.