புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வட கிழக்கு பருவமழை
வட கிழக்கு பருவ மழை தொடங்கியதையடுத்து வங்கக்கடலில் அக்டோபர் 15 ஆம் தேதி காலை 5 மணியளவில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.
இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியதால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டு அக்டோபர் 15, 16 தேதிகளில் சில மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் வழங்கப்பட்டது.
புதிய காற்றழுத்த தாழ்வுநிலை
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கன மழை பெய்யாவிட்டாலும் சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று (17-10-2024) அதிகாலை 4.30 மணி அளவில் வட தமிழகம் - தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில், புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு வடக்கே கரையை கடந்தது.
இந்த நிலையில், அந்தமான் கடல் பகுதியில் வரும் 20 ஆம் தேதி வளிமண்டல சுழற்சி ஒன்று உருவாக உள்ளது எனவும், இது வலுப்பெற்று 22 ஆம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகி வடமேற்கு திசையில் நகர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.