உயிர் பிழைக்க கடித்த பாம்பை திருப்பி கடித்த இளைஞர் - இறுதியில் என்ன ஆச்சு தெரியுமா?
மூட நம்பிக்கையில் கடித்த பாம்பை திருப்பி கடித்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
ரயில்வே ஊழியர்
பீகார் மாநிலம் நவடா பகுதியில் உள்ள ராஜவுலியின் காட்டுப்பகுதியில் ரயில்வே ஊழியர்கள் தண்டவாளம் அமைக்கும் பணியினை செய்து வந்துள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் லோகர் (வயது 35). அங்கு கூடாரம் அமைத்து அவர்கள் தண்டவாள பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை வேலை முடிந்ததும் இருப்பிடத்திற்கு சென்று அயர்ந்து தூங்கி விட்டார். அங்கு அவரை ஒரு விஷப்பாம்பு ஒன்று கடித்துள்ளது. உடனே சந்தோஷ் லோகர் அந்த பாம்பை கையில் பிடித்து 2 முறை கடித்துள்ளார்.
பாம்பு கடி
இதில் அந்த பாம்பு உயிரிழந்துள்ளது. இதற்கிடையே சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து அவர் கையில் பாம்புடன் உள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்து, உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் குழு அளித்த தீவிர சிகிச்சையில் உயிர் பிழைத்தார்.
சந்தோஷிடம் மருத்துவர்கள் விசாரித்த போது, "பாம்பு கடித்தால் அந்த பாம்பை பிடித்து உடனடியாக 2 முறை கடிக்க வேண்டும். அப்படி கடித்தால் நமது உடலில் ஏறிய விஷம் மீண்டும் பாம்பின் உடலுக்கே சென்றுவிடும். இதனால் பாம்பு கடியால் நாம் உயிரிழக்க மாட்டோம் என்ற நம்பிக்கை எங்கள் கிராமத்தில் உள்ளதாக பாட்டி கூறியுள்ளார்'' என்றார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவமனைஊழியர்கள், பாம்பு கடித்தால் அதனை திரும்ப கடிப்பதால் நமக்கு தான் பாதிப்பு அதிகமாகலாம் ஆனால் விஷம் அதன் உடலுக்கு செல்லாது. மூடநம்பிக்கை கதைகளை இனி நம்பாதீர்கள். உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைத்ததால் தான் உயிர் பிழைத்துள்ளீர்கள் என அறிவுரை கூறி அனுப்பினர்.