இனி ரயில் டிக்கெட் கிடைப்பது ஈசி - வருகிறது AI தொழில்நுட்பம்
ரயில் டிக்கெட் முன்பதிவில் உள்ள முறைகேடுகளை தவிர்க்க AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
ரயில் டிக்கெட் முன்பதிவு
தொலைதூர பயணங்களுக்கு பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்புவார்கள். காரணம் தனியார் பேருந்து கட்டணத்தை ஒப்பிடும் போது ரயில் கட்டணம் குறைவு மற்றும் பயண நேரமும் குறைவு.
ஆனால் ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முற்படும் போது, பெரும்பாலானவர்களுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை. பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட் விற்பனை முடிந்து விடும்.
இடைத்தரகர்கள்
இதற்கு இடைத்தரகர்கள் மொத்தமாக டிக்கெட் முன்பதிவு செய்ததே காரணம் என பல காலமாக பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து, நாடு முழுவதும் நடத்திய பல்வேறு கட்ட சோதனைகளில், சட்டவிரோத டிக்கெட் முன்பதிவு தொடர்பாக 4,725 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில், 4,975 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், ரூ.53.38 கோடி மதிப்புள்ள 1,24,529 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, முன்பதிவு முறைகேடுகளில் ஈடுபட்டதாக 26,442 இணையதள ஐ.டி.கள் முடக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
AI தொழில்நுட்பம்
இனி வரும் காலங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவில் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்க, முக அடையாளம், கைரேகை சரிபார்த்தல், தரவுகளை தீவிரமாக ஆய்வு செய்ய கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற நவீன நடவடிக்கைகளை மேற்கொள்ள ரயில்வே பாதுகாப்பு படை ஆலோசித்து வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மோசடிகளை உடனுக்குடன் தடுக்க இயந்திர கற்றல் (Machine Learning) முறை பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இந்திய ரயில்வே சட்டம் பிரிவு பிரிவு 142(1)-இன் படி ரயில்வே ஊழியர் அல்லது அங்கீகாரம் பெற்ற முகவர் தவிர மற்றவர் பயணச் சீட்டு விற்பனையில் ஈடுபடுவதும் குற்றமாக கருதப்படுகிறது. இதை மீறுபவர்கள் அபராதம் அல்லது சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.