கல்யாணத்தன்று அவசரப்படுத்திய மாப்பிள்ளை - இன்ப அதிர்ச்சி கொடுத்த ரயில்வே!
மணமகன் வைத்த கோரிக்கையை ரயில்வே நிறைவேற்றியுள்ளது.
மணமகன் கோரிக்கை
மும்பையைச் சேர்ந்த சந்திரசேகர் வாக் என்பவருக்கு கல்யாணம் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, தனது குடும்பத்தினர் 35 பேருடன் அசாம் மாநிலம் கவுகாத்தி நோக்கி புறப்பட்டுள்ளார்.
அதற்காக ஹவுரா சென்று, அங்கிருந்து கவுகாத்தி செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். தொடர்ந்து, கல்யாண் - ஹவுரா இடையே கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளனர். ஆனால், ஹவுரா ரயில் நிலையத்தை சுமார் 3 மணி நேர தாமதத்துக்குப் பிறகே ரயில் சென்றடையும் என்ற நிலை உருவாகியுள்ளது.
ரயில்வே முடிவு
இதனால் மாலை 4 மணிக்கு கவுகாத்தி செல்லும் சாரிகாட் எக்ஸ்பிரஸ் ரயிலை பிடிக்க முடியாது என்பதை சந்திரசேகர் உணர்ந்துள்ளார். ஒருவேளை அந்த ரயிலை பிடிக்க முடியவில்லை என்றால் குடும்பத்தோடு சென்று குறித்த நேரத்தில் திருமணம் செய்துக்கொள்ள இயலாது என அச்சமடைந்துள்ளார்.
உடனே, ரயில்வேத் துறைக்கு எக்ஸ் பக்கத்தில் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில் தன்னுடைய ரயில் முன்பதிவு டிக்கெட்டுகளை இணைத்து நிலைமையை எடுத்துரைத்துள்ளார். இதன்பின் மணமகனின் கோரிக்கை உயரதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
பின், ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து கீதாஞ்சலி ரயில் டிரைவருக்கு விரைவாக ரயிலை இயக்க உத்தரவிடப்பட்டு, மறுபுறம் சாரிகாட் ரயில் தாமதமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து சந்திரசேகர் குடும்பத்தினர் உரிய நேரத்துக்கு சென்று திருமணத்தை நடத்தியுள்ளனர். அவர் ரயில்வே துறைக்கு மகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்துள்ளார்.