பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு வாட்ஸ்அப் குரூப் - ரயில்வேயின் புதிய திட்டம்
ரயிலில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக வாட்ஸ்அப் குழுவை உருவாக்க ரயில்வே காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
ரயிலில் பெண்களின் பாதுகாப்பு
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ரயில்களில் பயணிக்கும் பெண்களுக்கும் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் சமீபத்தில் அடுத்தது நிகழ்ந்தது.
முன்னதாக வேலூர் அருகே ரயிலில் பயணித்த கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவத்தில் அந்த பெண்ணின் கரு கலைந்தது. அதனையடுத்து பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலருக்கே பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வாட்ஸ்அப் குழு
இந்நிலையில், தற்போது இரவு 10 மணிக்கு பின்னர் புறப்படும் ரயில்களில் ரயில்வே காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர்(ஆர்.பி.எப்) இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ரயிலில் தினமும் பயணிக்கும் பெண்கள், சிறு தொழிலில் ஈடுபடும் திண்பண்ட வியாபாரிகள் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து பகுதி வாரியாக வாட்ஸ்அப் குழுவை உருவாக்க ரயில்வே காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதன் மூலம் பெண் பயணிகளுக்கு ஏற்படும் தொந்தரவு, செல்போன் மற்றும் செயின் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிய, இந்த வாட்ஸ் அப் குழு பயன்படும் என ரயில்வே காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.