இனி ரயில் ஓட்டுநர்கள் இளநீர், வாழைப்பழம் சாப்பிட தடை - ஏன் தெரியுமா?
ரயில் ஓட்டுநர்கள் பணி நேரத்தில் இளநீர், வாழைப்பழம் சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
லோகோ பைலட்டுகள்
இந்திய ரயில்வேயின் ரயில் ஓட்டுநர்கள்(லோகோ பைலட்டுகள்) பணிக்கு வரும்போது மது அருந்தியுள்ளார்களா என ஆல்கஹால் பரிசோதனை செய்யும் கருவியின் மூலம் சோதிக்கப்படுவார்கள்.
அதே போல், கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் பிரிவில் உள்ள லோகோ பைலட்டுகளை சோதித்த போது, அவர்கள் மது அருந்தியிருந்ததாக அந்த இயந்திரம் காட்டியுள்ளது.
கட்டுப்பாடு
ஆனால் அந்த ஊழியர்கள் தாங்கள் மது அருந்தவில்லை என மறுத்துள்ளனர். இதனையடுத்து குற்றச்சாட்டை சந்தித்த ஊழியர்களின் இரத்த மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிவில் அவர்களின் ரத்தத்தில் ஆல்கஹால் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இது பற்றி லோகோ பைலட்டுகளிடம் கேட்ட போது, தாங்கள் இளநீர், வாழைப்பழம், இருமல் மருந்து, சாப்பிட்டதாக வெவ்வேறு காரணங்களை தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, லோகோ பைலட்கள் பணியில் இருக்கும்போது, இளநீர், வாழைப்பழம், ஹோமியோபதி மருந்துகள், இருமல் சிரப்கள், குளிர்பானங்கள் போன்றவைகளை உட்கொள்ளக்கூடாது. இவற்றில் ஏதேனும் ஒன்றை உட்கொள்ள விரும்பினால், அவர்கள் டிப்போவில் உள்ள க்ரூ கன்ட்ரோலருக்கு (CRC) எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும்.
ஊழியர்கள் எதிர்ப்பு
ரயில்வே மருத்துவ அதிகாரியின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெற்ற பின்னரே ஆல்கஹால் கொண்ட மருந்தையும் பயன்படுத்த முடியும் என திருவனந்தபுரம் பிரிவின் மூத்த பொறியியலாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
"ஆல்கஹால் பரிசோதனை கருவிகளில் பிரச்சினை உள்ள நிலையில், அதற்கு தீர்வு காணாமல், ரயில் இன்ஜின் டிரைவர்கள் சாப்பிடுவதில் கட்டுப்பாடு விதிக்கலாமா?" என ரயில்வே ஊழியர்களும், லோகோ பைலட்டுகளின் சங்கங்களும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. மேலும், இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.