காஷ்மீரின் மாநில அந்தஸ்தை பறிக்க இதுவே காரணம் - ராகுல் காந்தி விளக்கம்
வெளிமாநிலத்தவர்தான் காஷ்மீரை இயக்க வேண்டும் என பாஜக விரும்புவதாக ராகுல் காந்தி பேசியுள்ளார்.
காஷ்மீர் தேர்தல்
ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்திற்கு 10 ஆண்டுகள் கழித்து தேர்தல் நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீரில் அரசியலமைப்பின் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அங்குள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 18ஆம் தேதி முடிந்துள்ள நிலையில், 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று(25.09.2024) நடைபெற்றுள்ளது. 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8ஆம் தேதி நடைபெற உள்ளது.
ராகுல் காந்தி
இந்நிலையில் அங்கு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி, "நாடு விடுதலைக்குப் பின்னர் யூனியன் பிரதேசங்கள்தான் மாநிலங்களாக அந்தஸ்து பெற்றிருக்கின்றன. ஆந்திராவிலிருந்து தெலுங்கானா, பீகாரிலிருந்து ஜார்க்கண்ட், மத்திய பிரதேசத்திலிருந்து சத்தீஸ்கர் என புதிய மாநிலங்கள்தான் உருவானது.
ஆனால் சுதந்திர இந்திய வரலாற்றிலேயே ஒரு மாநிலம், 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட கொடுமை ஜம்மு காஷ்மீரில்தான் நிகழ்ந்தது. காஷ்மீரை வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் மூலம் நிர்வகிக்க வேண்டும் என்பதற்காக தான், அதன் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு உள்ளது.
வேறு மாநிலத்தவர்
இன்று காஷ்மீரை இம்மாநிலத்தை சேர்ந்தவர் நிர்வகிக்கவில்லை. வேறு மாநிலத்தை சேர்ந்தவர் தான் நிர்வகிக்கிறார். மனோஜ் சின்ஹா இருக்கும் வரை, வேறு மாநிலத்தவர்கள் தான் பலன்பெறுவார்கள். இம்மாநில மக்கள் புறக்கணிக்கப்படுவார்கள். வெளிமாநிலத்தவர் தான் காஷ்மீரை இயக்க வேண்டும் எனவும், காஷ்மீர் மக்கள் நிர்வகிக்கக்கூடாது எனவும் பாஜக விரும்புகிறது.
தேர்தலுக்கு பிறகாவது காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். அதற்காக இந்தியா கூட்டணி மக்களவை, மாநிலங்களவை முதல் வீதிகள் வரையில் இறங்கி, அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்" என பேசியுள்ளார்.