எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி இல்லையா? - காங்கிரஸ் நிர்வாகி வெளியிட்ட பரபரப்பு தகவல்
நாடாளுமன்ற எதிர் கட்சி தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
எதிர் கட்சி தலைவர்
2024 நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மோடி பிரதமராக நாளை (06.06.2024 ) பதவியேற்க உள்ளார். அதற்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடக்கிறது.
99 இடங்களை ஜெயித்த காங்கிரஸ் எதிர்கட்சியாக அமர்ந்துள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை முடிவு செய்வதற்கான காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடை பெற உள்ளது.
காங்கிரஸ் கூட்டம்
இது குறித்து காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் காங்கிரஸின் இன்றைய நிகழ்ச்சி நிரல் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதன்படி, இன்று காலை 11 மணிக்கு டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டியின் ஆலோசனைக்கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். அதில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தியாளர் சந்திப்பு
அதனை தொடர்ந்து, மதியம் 1 மணி அளவில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின், மாலை 5.30 மணிக்கு, நாடாளுமன்ற வளாகத்தில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம்.பி.க்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இதில், அனைத்து எம்.பி.க்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், எதிர் கட்சி தலைவர் பதவிக்கு வேறு ஒருவருக்கு வாய்ப்பு வழங்கலாம் என ராகுல் காந்தி விரும்புவதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
ஆனால் ராகுல் காந்தியே எதிர் கட்சி தலைவர் ஆக வேண்டுமென்று கட்சியினர் விரும்புகின்றனர். ராகுல் காந்தியே தேர்வு செய்யப்பட வேண்டுமென்று தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதனால் ராகுல் காந்தியே எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.