தேர்தலில் மோடியின் நம்பிக்கையை அழித்தது இதுதான் - ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு!
மக்களவைத் தேர்தலின்போது இண்டியா கூட்டணி நரேந்திர மோடியின் நம்பிக்கையை அழித்துவிட்டது.
ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.இந்த நிலையில் இரண்டு நாள் பயணமாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளனர்.
அதன்படி ,ஸ்ரீநகரில் கட்சித் தொண்டர்களிடம் உரையாற்றினர். அப்போது பேசிய ராகுல் காந்தி, ''மக்களவைத் தேர்தலின்போது இண்டியா கூட்டணி நரேந்திர மோடியின் நம்பிக்கையை அழித்துவிட்டது. அவர் ராகுல் காந்தியால் தோற்கடிக்கப்படவில்லை என்று கூறினார்.
மாறாக, காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம், இண்டியா கூட்டணி, அன்பு, ஒற்றுமை,மரியாதை ஆகியவற்றால் தோற்கடிக்கப்பட்டார். வெறுப்புச் சந்தையில் அன்பின் கடையைத் திறக்க வேண்டும் என்பதையே ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும், இளைஞர்களுக்கும் நான் சொல்ல விரும்பும் செய்தி என்று கூறினார்.
370வது பிரிவு ரத்து
தொடர்ந்து வெறுப்பை அன்பினால் வெல்லலாம். மேலும், ஒற்றுமையின் மூலம் நாம் வெறுப்பை அன்பால் தோற்கடிப்போம் என்று தெரிவித்தார். மேலும் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து விரைந்து வழங்கப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி மற்றும் இந்தியா கூட்டணி உறுதியாக உள்ளது.
சுதந்திரத்திற்குப் பிறகு ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக மாறுவது இதுவே முதல் முறை. இதுவரை நடந்ததில்லை. யூனியன் பிரதேசங்கள் மாநிலங்களாக மாறியுள்ளன. ஆனால் ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக மாறுவது இதுவே முதல் முறை" என்று கூறினார்.
தொடர்ந்து பேசியவர் ,'' ஜம்மு காஷ்மீரில் யாரேனும் அச்சமின்றி உழைத்திருந்தால், அது காங்கிரஸ் தொண்டர் தான். ஜம்மு காஷ்மீர் மக்களுக்குக் காங்கிரஸ் கட்சி எப்போதும் ஆதரவளிக்கும். மேலும் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் எனக்குத் தெரியும் .இனி காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தில் பணியாற்றும் என்று உறுதியளித்தார்.